சுற்றுச் சூழல் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதற்காக 'ஐகானிக் 2022' சர்வதேச விருதுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தேர்வு பெற்றார்.
இதற்காக துபை நாட்டுக்கு வருமாறு 'எலைட் வேர்ல்ட் ரெக் கார்ட்ஸ்' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ரபி பால்பாக்கி, மாவட்ட ஆட்சியருக்கு சனிக்கிழமை நேரில் அழைப்பு விடுத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 27.5.2022 அன்று மாவட்டம் முழுவதும் 2,500 சதுர கி.மீ. பரப்பளவில் 3 மணி நேரத்தில் 186.9 டன் நெகிழிக் கழிவுகளைச் சேகரித்த நிகழ்வின் மூலம் உலக சாதனை படைக்கப்பட்டது. ஏற்கெனவே, சுவிட்சர்லாந்து நாட்டில் 3 மணி நேரத்தில் 128.7 டன் நெகிழிக் கழிவுகளைச் சேகரித்தே உலக சாதனையாக இருந்தது. அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டது.
மேலும், கடந்த 3.10.2022 அன்று ஒரே நாளில் 288 பஞ்சாயத்துகளில் 52,81,647 பனை விதைகளை 880 இடங்களில் 5 மணி நேரத்தில் நடவு செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
இந்த இரு சாதனைகளும் இயற்கை மற்றும் பசுமையைக் காக்கவும், மனித சமூகத்தை உள்ளடக்கிய பல்லுயிர்களுக்கும் நன்மை அளிக்கும் நோக்கில் படைக்கப்பட்டது.
இதைப் பாராட்டி 'எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் ரபி பால்பாக்கி, நௌரா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியனை, ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, வரும் 2023- ஆம் ஆண்டு துபையில் நடைபெறும் விழாவில் விருது பெற வருமாறு அழைப்பு விடுத்தனர்.
நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ப.குமரேஸ்வரன், ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் ஜி.லோகநாயகி, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் ஒருங்கிணைப்பாளர் பிரதீப்கு மார், செயற்பொறியாளர், நகராட்சி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.