ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அரசு மகளிர் கல்லூரி அருகே வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்பு மீது மோதியது.

திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் தவிர்க்க முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த வாலாஜாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் சாலை தடுப்பு மீது ஏறி விபத்துக்குள்ளாகி நின்றிருந்த பேருந்தை பொக்லைன் இயந்திரத்தின் உதவி கொண்டு சாலையிலிருந்து அகற்றினர். 

இந்த விபத்தில் பேருந்து முன் பகுதியானது பலத்த சேதமடைந்தது. மேலும் 4 பேர் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மற்றபடி பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.