அரக்கோணம் காவல் கோட்டத்தில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுப்பதற்காக பஸ் நிலையங்கள், பள்ளி, கல்லூரி மற்றும் மைதானம் ஆகிய பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து ரோந்து பணியில் ஈடுபட அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ் பெக்டர் சாலமன் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று டவுன் போலீசார் மங்கம்மாபேட்டை ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு போலீசார் வருவதை கண்ட 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை துரத்தி சென்று போலீசார் 5 பேரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

அதில் அவர்கள் அரக்கோணம், மங்கம்மாபேட்டை மற்றும் பாப்பான் குளத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 26), ஹரிஷ் பாபு (21), நரேஷ் (19), சிரஞ்சீவி (19) மற்றும் ஒரு வாலிபர் என்பதும், அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ஒரு கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.