ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் சார்பில், ஒவ்வொரு மாதத்தின் 2 மற்றும் 4ம் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலை வாய்ப்பு முகாம் நாளை (28ம் தேதி) நடைபெற உள்ளது. இதில், பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பிஇ முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேற்காணும், கல்வித்தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நாளை (28ம் தேதி) காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெற்றவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.