சோளிங்கர் அருகே தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், அய்யநேரியைச் சேர்ந்த தசரதனின் மகன் சரத்குமார் (20). வர்ணம் பூசும் தொழிலாளி. இவருக்கும், சோளிங்கரை அடுத்த வெங்குப்பட்டு அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த உமாபதியின் மகள் திவ்யாவுக்கும் (19)கடந்த ஓர் ஆண்டுக்கு முன் இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், சரத்குமார், தனது மாமனார் உமா பதியுடன் (44) சோளிங்கரில் பொருள்கள் வாங்க திங்கள்கிழமை பைக்கில் சென்றுள்ளார்.
வழியில் வன்னியமோட்டூருக்கும், பனவட்டாம் பாடிக்கும் இடையே சென்றபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் 5 பேர் வழிமறித்து சரத்குமாரை கட்டையால் தாக்கியுள்ளனர். உமாபதியை யாரும் தாக்காத நிலையில் அவர் தப்பினார். இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த சரத்குமார் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கும், தொடர்ந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயி ரிழந்தார். அரக்கோணம் ஏஎஸ்பி கிரிஷ் யாதவ் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது குறித்து சோளிங்கர் போலீஸார் வழக்குப் பதிந்து கொலை செய்த மர்ம நபர் களைத் தேடி வருகின்றனர்.