ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கந்தசஷ்டி விழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம்.
அதேபோல் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. அதனை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும் நடைபெற்றது. தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்பு பூஜை செய்தார்.
கந்த சஷ்டி முதல் நாள் முன்னிட்டு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, வெள்ளி வேல் மற்றும் சேவல் கொடியுடன் வள்ளி-தெய்வானை சமேதராக சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பாலமுருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக கணபதி பூஜையும், அதனைத் தொடர்ந்து சுப்பிரமணிய திரிசதி மூல மந்திர சிறப்பு ஹோமமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ‘அரோகரா‘ முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து நேற்று சூரிய கிரகணம் என்பதால் பகல் 12 மணி அளவில் கோயில் நடைசாத்தப்பட்டது. பின்னர் மாலை 6:30 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கந்த சஷ்டி சூரசம்கார கொடியேற்று விழா நடை பெற்றது.
அதேபோல் ஆற்காடு குட்டகரைத் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியபாளையத்தம்மன் கோயில் சூரிய கிரகணம் முன்னிட்டு பகல் 12 மணி அளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு மேல் திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.