அரக்கோணம் பகுதிகளில் பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவதை தடுத்து கொள்ளையர்களை விரைந்து பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு அறிவுறுத்தலின்படி அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே ஓம் சக்திகோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த நபரை பிடித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக கூறியதால் அந்த நபரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

அதில் அந்த நபர் மதுரையை சேர்ந்த இளங்கோ (வயது 45) என்பதும் அரக்கோணம் பகுதியில் பூட்டியிருந்த வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடு பட்டதும் விசாரனையில் தெரியவந்தது.

இதனையடுத்து இளங்கோவை டவுன் போலீசார் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.