ஆற்காட்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 ஐம்பொன் சிலைகள், 2 வெள்ளி சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் ரோந்து
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தலையில் காயங்களுடன் மருத்துவமனைக்குச் சென்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஆற்காடு கன்னிகோவில் தெருவை சேர்ந்த முரளிகிருஷ்ணன் (வயது 24) என்பதும் இவருக்கு சிலை கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. மேலும் இதில் பணம் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதில் தலையில் காயம் ஏற்பட்டதும் தெரிந்தது.
மேலும் முரளிகிருஷ்ணன் மற்றும் ஆற்காடு அருகே தாஜ்புரா ஊராட்சி சத்யா நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (39), வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (34) ஆகிய 3 பேரும் சேர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை பகுதியில் உள்ள ராமர் கோவில் மண்டபத்தின் கீழ் சிலைகள் குறித்த தகவல் தரும் கருவியின் மூலம் பூமிக்கு அடியில் இருந்த சுமார் ஒரு அடி மற்றும் அரை அடிஉயரம் உள்ள ஐம்பொன்களால் ஆன அம்மன், காளி, லட்சுமி, முருகன் ஆகிய 4 சிலைகளும் 2 வெள்ளியிலான விநாயகர் சிலைகளும் கடத்தி வரப்பட்டு பாலாஜியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
ஐம்பொன் சிலைகள் பறிமுதல்
மேலும் இதில் பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து சிறப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ் வேஸ்வரய்யா நேரில் சென்று கடத்தப்பட்ட சிலைகள் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் 4 ஐம்பொன் சிலைகள், 2 வெள்ளி சிலைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும்
சிலை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பாலாஜி, முரளிகிருஷ்ணன், தினேஷ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.