சோளிங்கர் அடுத்த புலிவலம் ஊராட்சியில் தனியார் கம்பெனி இயங்கிவருகிறது. நேற்று, இந்த கம்பெனியில் இருக்கும் பயனற்ற பொருட்களை வாகனத்தில் ஏற்றுவதற்கு கூலி ஆட்களாக புலிவலத்தை சேர்ந்த மணிகண்டன்(30), வன்னியவேடு செந்தில்குமார்(45), வாங்கூர் வெங்கடேசன்(63), வாலாஜா கேகே நகர் தனசேகரன்(53), திருவள்ளூர் மாவட்டம், ஆர். கே.பேட்டை கொண்டாபுரம் வெங்கடேசன் (52) ஆகியோர் சென்றனர்.

பின்னர், கம்பெனிக்குள் இருந்து இரும்புகளை 4 சக்கர வாகனத்தில் ஏற்றும்போது அருகில் உள்ள புதிய துளையிடும் ராடுகளை மறைத்து ஏற்றி வந்துள்ளனர். இது கண்காணிப்பு கேமரா மூலம் பதிவான காட்சிகளை முதன்மை காவலர் ரமேஷ் பார்த்துள்ளார். இதையடுத்து, வாகனத்தை சோதனை செய்தபோது மறைத்து வைத்திருந்த 4 லட்சம் மதிப்பிலான 155 ட்ரில் பிட் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, திருட்டில் ஈடுபட்ட 5 பேரையும் கையும், களவுமாக பிடித்து கொண்டபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்து புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.