ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தண்டு மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (25). பிஇ பட்டதாரியான இவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதே தனியார் தொழிற்சாலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தேன்மொழி (24) பணியாற்றி வந்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட காதல் தேன்மொழியின் வீட்டிற்கு தெரிய வரவே தேன்மொழியை பணியில் இருந்து அவர்களது பெற்றோர் நிறுத்தியுள்ளனர். தேன்மொழி பணியிலிருந்து பாதியில் நின்ற பிறகும் 3 ஆண்டுகளாக அவர்களது காதல் தொடர்ந்து வந்துள்ளது.

சக்திவேலின் தாய் மற்றும் தந்தை கொரோனாவால் ஓராண்டிற்கு முன்பு மரணடைந்தனர். இதனை அடுத்து சக்திவேல் தன் ஒரே தங்கை பவானியுடன் வாலாஜா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பவானிக்கு திருமணம் நடந்து முடிந்தது. அதே நேரத்தில் தேன்மொழி கடந்த ஆகஸ்ட் மாதம் 5 தேதி வீட்டை விட்டு வெளியேறி சக்திவேலுடன் பதிவு திருமணம் செய்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து 10 ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட SP அலுவலகத்தில், தங்கள் இருவரும் (சக்திவேல் வன்னியர் தேன்மொழி அம்பலத்தார்) வேற்று சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி தஞ்சமடைந்தனர். நிம்மதியை சீர்குலைத்த கும்பல்
இந்த புகார் வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு காவல் நிலையத்தில் பெண்ணின் வீட்டாரை அழைத்துப் பேசி சுமூகமாக இந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே நண்பர்கள் உதவியோடு இருவருக்கும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதன் காரணமாக வாலாஜா காவல் நிலையத்தில் பெற்றோர்களிடம் சுமுக பேச்சுவார்த்தை முடித்த அன்று இரவே வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்தில் பெங்களூரை நோக்கி சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்டு இருந்த பெண்ணின் உறவினர்கள் பேருந்தை பின் தொடர்ந்து சென்று வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த சேர்காடு பகுதியில் பேருந்தை மரித்து சக்திவேலை தாக்கி பெண்ணை தங்களுடன் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். இது குறித்து மீண்டும் ராணிப்பேட்டை மாவட்ட SP அலுவலகத்தில் புகார் அளித்தபோது அந்தப் பெண்ணை வழிமறித்து அழைத்துச் சென்ற இடம் வேலூர் மாவட்டம் திருவலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடம் எனவே திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர். திருவலம் காவல் நிலையத்தில் ஏற்கனவே இது தொடர்பான புகார் ராணிப்பேட்டை SP அலுவலகத்திலும் வாலாஜாபேட்டை காவல் நிலையத்திலும் விசாரிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அங்கேயே சென்று புகார் அளிக்கும்படி சக்திவேலை திருப்பி அனுப்பியுள்ளனர்.
எந்த காவல் நிலையத்திலும் புகார் ஏற்றுக் கொள்ளப்படாத காரணத்தினால் வேலூர் சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார் சக்திவேல். அப்போது சக்திவேலை நீதிமன்றம் அணுகி ஆட்கொணர்வு மனு போடுமாறு அறிவுறுத்தி அங்கிருந்தும் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. மணு தாக்கல் செய்ய போதிய பணம் இல்லாத காரணத்தினால் சம்பள பணம் வந்த பிறகு அந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என காத்திருந்த சக்திவேல் கடந்த 13ஆம் தேதி அன்று அதீத மன உளைச்சல் காரணமாக எலி மருந்தை அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை மீட்ட நண்பர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று நாள் தொடர் சிகிச்சைக்கு பின்பு 16 ஆம் தேதி இரவு சக்திவேல் உயிர் இழந்தார்.

உயிரிழந்த சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு நேற்று அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இன்று தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், சக்திவேல் இறப்பதற்கு முன்பு தனது டைரியில் எழுதியிருந்த கடிதம் கிடைத்தது.
அந்த கடிதத்தில் '' i am quit'' என ஆரம்பித்து, என்னை மன்னித்துவிடு உன் முகத்தை பார்க்கும் அருகதை எனக்கு கிடையாது. இனிமேல் இனி ஒரு பிறவி இருந்தால் நாம் அங்கு சந்திக்கலாம். உன்னுடம் இருந்த 5 நாட்கள் என் உறவு, நண்பர்கள் அனைவரையும் தூக்கி எறிந்தேன். உன் அன்புக்கு நான் அடிமை ஆனேன். தற்கொலை என்பது கோழைத்தனம் என பலமுறை உன்னிடம் கூறியிருக்கிறேன். வேறு என்ன செய்வது தெரியாமல் உன்னை விட்டு இவ்வுலகை விட்டு என் அன்னையிடம் செல்கிறேன். யாரை நம்புவது என்று தெரியவில்லை முடிந்தால் நான் சென்ற பிறகு என்னை மறக்காமல் இரு. என் ஆசை பொண்டாட்டி நாம் மூன்று வருடம் காதலில் இருந்தோம். இந்த 5 நாட்கள் நம் திருமண வாழ்க்கை சீக்கிரம் முடிவடையும் என கனவில் கூட நினைக்கவில்லை. போலீஸ் பஸ் ஏற்றிவிட்ட பிறகு எல்லாம் முடிந்து விட்டது. இனி நமக்கு எந்த தொந்தரவும் இல்லை. இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது. என பேசிக்கொண்டு பேருந்தில் சென்ற போது உன் வீட்டு உன் விசுவாசிகள் இப்படி செய்வார்கள் என நான் ஒருபோதும் கனவில்கூட நினைக்கவில்லை .நானும் வாலாஜா போலீஸ் ஸ்டேஷன், திருவலம் போலீஸ் ஸ்டேஷன், ராணிப்பேட்டை எஸ்பி ஆபிஸ் வேலூர் டிஐஜி ஆபீஸ் சென்று புகார் கொடுத்தும் உன்னை மீட்டு விடலாம் என எண்ணி ஏமாந்து போய் விட்டேன். கையில் கிடைத்த பொருளை தொலைத்த பாவி ஆனேன். நான் நீ ஆசைப்பட்டபடி உன் புகைப்படம் என் வீட்டில் மாட்டி விட்டேன். அதுபோல் நீ ஆசைப்பட்டது போல் உன் கணவனாய் உயிர் நீக்கம் செய்கிறேன் பாப்பு. ஐ அம் ரியலி சாரி பாபு ,மிஸ் யூ சோ மச் பாப்பு, லவ் யூ சோ மச் பாப்பு, என் ஆசை பொண்டாட்டி என இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறையினர் எல்லையை காரணம் காட்டி யார் நடவடிக்கை எடுப்பது என்பதில் மெத்தனமாக செயல்பட்ட காரணத்தினால் தனது காதல் மனைவியை காப்பாற்ற இயலாத நிலை ஏற்பட்டு அதீத மன உளைச்சல் காரணமாக சக்திவேல் தற்கொலை செய்யப்பட்ட சம்பவம் வாலாஜாபேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.