பொதுவாக ஒரு படம் இறுதிக்கட்டத்தை நெருங்கும் போதுதான் ஓ.டி.டி.நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அந்த படத்தை வாங்க முயற்சிப்பது வழக்கம். ஆனால் இதற்கெல்லாம் மாறாக விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு இப்போதே ஒ.டி.டி. நிறுவனங்கள் வலையை விரிக்கத் தொடங்கியுள்ளன.

தற்போது வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படம் முடிந்த கையுடன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப்படத்தில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் உள்பட 6 வில்லன்கள் என்ற தகவல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. தற்போது இதில் முக்கிய வில்லனாக டைரக்டர் கவுதம் வாசுதேவ்மேனன், முக்கிய வில்லியாக நடிகை சமந்தா ஆகிய இருவரும் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

தற்போது விஜய்யின் புதிய படத்தை பிரபல ஓ.டி.டி. நிறுவனம் கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது. விஜய் படங்கள் இதுவரை நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியானதில்லை. கொரோனா தொற்று காலத்தில்கூட படத்தை வெளியிடாமல் இருந்த விஜய், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு அனுமதித்த பிறகே 'மாஸ்டர்' படத்தை தியேட்டரில் வெளியிட சம்மதித்தார். அதேபோல் இந்த புதிய படத்தையும் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட விஜய் அனுமதிக்க மாட்டார் என்று பேசப்படுகிறது.