கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற 4 ஆயிரத்து 560 அடி உயரம் கொண்ட பர்வதமலை உள்ளது. இந்த மலை உச்சியில் மல்லிகார் ஜூனேஸ்வரர் உடனுறை பிரம்மராம்பிகை கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பிரசித்திபெற்ற இந்த மலைப்பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் விதமாக பல வாலிபர்கள் கஞ்சா புகைத்தபடியே மேளதாளத்துடன் இரவு முழுவதும் அமர்க்களம் செய்வதாக புகார்கள் வந்தது.

இருப்பினும், மலைஉச்சிக்கு சென்று யார்,யார் கஞ்சா பயன்படுத்துகிறார் கள்? சமூகவிரோத செயல்களில் ஈடு படுகிறார்கள்? என்பது குறித்து போலீசாரால் சென்று கண்காணிக்க முடியவில்லை.

மேலும், பவுர்ணமி தினங்களில் வனத்துறையும், பர்வதமலை பாதுகாப்பு குழுவும் சேர்ந்து பிளாஸ்டிக் பைகள் எடுத்துச் செல்வதை தடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக சமூகவிரோத செயல்கள் மலை உச்சியில் நடப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர், இதன் அடிப்படையில், கடலாடி போலீசார் பர்வதமலை அடிவாரத்தில் நேற்று மாலை சோதனை மேற்கொண்டனர். அப்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் மலை உச்சிக்குச் செல்ல தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு மலையேறினர். அவர்களை சோதனையிட்டதில், ஒரு வாலிபரின் பேக்கில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அந்த வாலிபரை மட்டும் போலீசார் கைது செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.