ராணிப்பேட்டை நகரில் வீடற்றோர், சாலையோரம் குடியிருப்போருக்கு நவீன வசதியுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தருவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி தலைமை வகித்தார். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் காந்தி பேசியதாவது:
சிப்காட் எமரால்டு நகர் பின்புறம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் சுமார் 9 ஏக்கர் காலியிடம் உள்ளது. இந்த இடத்தில் வீடு இல்லாத ஏழைகள் மற்றும் நீர்நிலை மற்றும் சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ள நபர்களுக்கு வீடுகள் கட்டி வழங்க வேண்டும்.

இந்த இடத்தை வருவாய் துறை மூலம் அளந்து பார்க்கவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் ஒப்புதல் பெற்று தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வழங்க வேண்டும். இங்கு சுமார் 850 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கலாம். மத்திய மாநில அரசின் நிதி உதவி மற்றும் பயனாளிகளின் பங்களிப்புடன் வீடுகள் கட்டித் தரப்படும்.

இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் படுத்த வேண்டும். அந்த அறிக்கையில், இந்த வளாகத்தில் குழந்தைகள் விளையாட பூங்காக்கள், விரிவான சாலைகள், ரேஷன் கடை மற்றும் பல்பொருள் சிறிய - அங்காடிகளும் இடம் பெற வேண்டும். மேலும், அடுக்குமாடி குடியிருப்பு வீடு களில் லிப்ட்வசதிகள் இருக்கும்படி திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.

இந்த வளாகத்தின் உள்ளே சிறிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவு நீரை சேகரித்து சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தும் வகையில் இந்தப் பணியை திட்ட அறிக்கையில் இடம் பெறச்செய்ய வேண்டும். மேலும், பிரதான சாலையில் இருந்து இங்கு செல்ல சாலை வசதி குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்ட தலைநகர் பகுதியில் வீடில்லாத பொதுமக்கள் சொந்தமாக வீடுகளில் வாழ்ந்திட தனி கவனம் செலுத்த வேண்டும். அடுத்த 6 மாதத்துக்குள் இதற்கான பணிகள் தொடங்கும் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஆர்டிஓ பூங்கொடி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (பொறுப்பு) சத்யபிரசாத், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர் மோகன், உதவி பொறியாளர் முருகதாஸ், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ஸ்ரீனிவாசன், வாலாஜா தாசில்தார் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.