9 pound jewelery stolen from a locked house near Agaravaram, Ranipet
ராணிப்பேட்டை சிப்காட் அக்ராவரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் குணசேகரன் ( 22). இவரும், இவரது மனைவியும் வேலூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகின்றனர். குணசேகரனின் தாயார் மட்டும் வீட்டில் உள்ளார்.
கடந்த 12ம் தேதி காலை 9 மணிக்கு கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் இருந்த குணசேகரனின் தாயார், 100 நாள் வேலைக்காக வீட்டை பூட்டிவிட்டு சாவியை அருகில் உள்ள ஒரு இடத்தில் வைத்து விட்டு சென்றுள்ளார். அன்று மாலை வீட்டுக்கு வந்த குணசேகரன் வீட்டின் கதவு திறந்திருப்பது கண்டு சந்தேகம் அடைந்தார். உள்ளே சென்று பார்த்ததில் அறையில் உள்ள பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த நெக்லஸ், கம்மல், மாட்டல், இரண்டு மோதிரம் மற்றும் ஜிமிக்கி ஆகிய நகைகளை காணவில்லை.இவற்றின் மொத்த எடை 9 பவுன் ஆகும்.
தகவலறிந்த சிப்காட் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத் தினர். அதில், இந்த வீடு பற்றியும், சாவிகள் இருக்கும் இடம் பற்றியும் தெரிந்த நபர் ஒருவர்தான் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.