இந்தியாவில் நடந்த முதல் சுதந்திரப் போர் என்று, 1857ல் நடந்த வீரப்புரட்சி போற்றப்படுகிறது. அதற்கு முன்னோடியாக அமைந்தது. வேலூர் கோட்டையில் இந்திய வீரர்கள் 1806 ஜூலை 10ல் நடத்திய அதிரடி புரட்சி. இது, சந்தர்ப்ப சூழல்களால் வெற்றிபெறாவிட்டாலும், 1857 புரட்சியின் முன்னோடி இதுவும் முதல் சுதந்திரப் போர்தான்' என்று சரித்திரத்தில் ஆழமாகத் தடம் பதித்துள்ளது!

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி படைகளுக்கும், திப்பு சுல்தானின் மைசூர் படைகளுக்கும், ஸ்ரீரங்கப் பட்டணத்தில் 1792ல் கடும் போர். திப்பு படைகளுக்கு பெரும் பின்னடைவு. சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல பகுதிகளை பிரிட்டிஷாருக்கு வழங்கி சமாதான ஒப்பந்தம் செய்தார் திப்பு. 1799ல் நடந்த போரில் திப்பு பலி. கோயம்புத்துாரும் பிரிட்டிஷ் வசம். அதே ஆண்டில் தஞ்சை, பாஞ்சாலங்குறிச்சியும் கைப்பற்றப் பட்டது. 1801ல் சிவகங்கையைக் கைப்பற்றியவர்கள், ஆற்காடு நவாபுடன் ஒப்பந்தம் செய்து ஆற்காடு, திருச்சி, மதுரை, நெல்லை பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பழைய ஆட்சியாளர்களின் படைகளில் பணியாற்றிய பெரும்பாலானோர், வேறு வழியின்றி, பிரிட்டிஷ் படைகளில் இணைந்தனர். படைகளில் ஆங்கிலேயர்களுக்கு அதிக அந்தஸ்து, அதிக சம்பளம் உள்ளிட்ட பல பாரபட்சங்கள் இருந்ததால், இந்திய வீரர்கள் குமுறி வந்தனர்.

வேலுார் கோட்டை

விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட வேலுார்கோட்டை, போர்களின் விளைவாக பிஜப்பூர் சுல்தான்கள், மராத்தியர்கள், நவாப்கள் கைகளுக்கு மாறியது.

ஆற்காடு நவாப்புடன் 1801ல் செய்த ஒப்பந்தப்படி, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் வந்தது,

கோட்டையில் இருந்த படைகளில், 370 பிரிட்டிஷாரும் ஆயிரத்து 500 இந்திய வீரர்களும் இடம்பெற்றிருந்தனர்.

கோட்டைக்குள் உள்ள அரண்மனையில்தான் திப்புவின் மனைவிகள்; மகன்கள், மகள்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களைப் பிரிட்டிஷார் தங்க வைத்திருந்தனர்.

'மதமாற்றம்' - கசையடி


மெட்ராஸ் ராணுவத்தில் 1805 நவம்பரில் சில புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டன. இந்துக்கள் திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவற்றை அணிய தடை, முஸ்லிம்கள் தாடி வைக்கத் தடை, காதணிகள் அணியத் தடை, பெரிய மீசை வைக்கத் தடை என கெடுபிடி அமலானது.

மேலும், 'இந்தியப்படை வீரர்கள், பாரம்பரியத் தலைப்பாகை அணியக்கூடாது. வட்ட வடிவிலான தொப்பிதான் அணிய வேண்டும்' என்று கூடுதலாக ஒரு கட்டுப்பாட்டை அமல்படுத்தினார், மெட்ராஸ் ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த சர் ஜான் கிராடாக். இந்த புதிய தொப்பி, கிறிஸ்தவர்களாக மதம் மாறிய இந்தியர்களுக்கு வழங்கப்படும் தொப்பி போல் இருந்தது. இதில் பொருத்தப்பட்டிருந்த சின்னம், விலங்கு தோலால் செய்யப்பட்டிருந்தது. சின்னத்தில், சிலுவைக் குறியீடு இருந்தது.

இதனால், 'இந்துக்களையும் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்ய சதி' என்று கொந்தளிப்பு வந்தது.

புதிய மாற்றங்களை கடுமையாக எதிர்த்து 21 பேர், மெட்ராஸ் கோட்டைக்கு (செயின்ட் ஜார்ஜ் கோட்டை) கொண்டு செல்லப்பட்டனர். அனந்தராமன் என்ற இந்து வீரருக்கும், ஷேக் அப்துல் ரகுமான் என்ற முஸ்லிம் வீரருக்கும் தலா 90 கசையடிகள் கொடுத்து, ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்தனர், மேலும் 19 இந்தியர்களுக்கு தலா 50 கசையடி கொடுத்து, மிரட்டி, மன்னிப்பு கடிதம் எழுத வைத்தனர்.

வாய்ப்பு... திட்டம்

சென்னை கோட்டையில் நடந்த கொடூரங்கள், வேலுார் கோட்டையில் இருந்த இந்திய வீரர்களின் கொந்தளிப்பை அதிகரித்தது. பழிதீர்க்க வேண்டும் என்று குமுறி வந்தனர்.

இந்த சூழலில், 1806 ஜூலை 10 காலையில், வேலுார் கோட்டைக்குள் படைவீரர்கள் அணிவகுப்பு: நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்தினத்தில் (ஜூலை 9), கோட்டை அரண்மனைக்குள், திப்புவின் மகள் நூருல் நிஸாம் பேகத்துக்கும் சையத் நிஜாமுதீன் என்பவருக்கும் திருமணம் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் திப்பு குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதால், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், 10ம் தேதி காலையில் அணிவகுப்பு நடப்பதால், 9ம் தேதி இரவில் கோட்டைக்குள்ளேயே தங்க இந்திய வீர்ர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

'இது, சாதகமான வாய்ப்பு! இந்த இரு அனுமதிகளைச் சாதுரியமாகப் பயன்படுத்தி, பிரிட்டிஷ் அதிகாரிகளையும் வீரர்களையும் வீழ்த்தி, கோட்டையைக் கைப்பற்றலாம்' என்று இந்திய வீரர்கள் திட்டமிட்டனர்.

அப்போது, 'கோட்டையில் மைசூர் சுல்தான் கொடியை ஏற்றி, திப்புவின் மகன் பதே ஐதரை புதிய சுல்தானாக அறிவிப்போம். அதன்மூலம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முஸ்லிம் சமூகத்தினரின் ஆதரவு பெருகும், இதனால் கோட்டையை மீண்டும் பிரிட்டிஷார் கைப்பற்ற விடாமல் தடுக்கலாம்' என்று சுபேதார் ஷேக் ஆதம், ஷேக் ஹமீத், ஜமேதார்கள் ஷேக் உசேன், ஷேக் காசிம் உள்ளிட்ட சில முஸ்லிம் வீரர்கள் தெரிவித்த ஆலோசனையும் ஏற்கப்பட்டது.

அதிரடி புரட்சி


1806 ஜூலை 10ம் தேதி அதிகாலையில், வேலுார் கோட்டைக்குள் இந்திய வீரர்களின் புரட்சி தாக்குதல் தொடங்கியது. முதலில் கோட்டை கமாண்டர் லெப்டினன்ட் கர்னல் பன்கோர்ட், 23வது படைப்பிரிவின் கர்னல் மே கேரஸ், மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் என அடுத்தடுத்து 15க்கு மேற்பட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே, பிரிட்டிஷ் சிப்பாய்கள் கடும் தாக்குதலைத் தொடங்கினர். எண்ணிக்கையில் அதிகமாக இருந்த இந்திய வீரர்கள், அவர்களைச் சுற்றிவளைத்து வீழ்த்தினர்.

ஒன்றரை மணிநேரத்துக்குள் கோட்டை கைப்பற்றப்பட்டது. பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு, மைசூர் சுல்தான் கொடி ஏற்றப்பட்டது. புதிய சுல்தானாக பதே ஐதர் அறிவிக்கப்பட்டார். வெளிப்பகுதியில் இருந்து பிரிட்டிஷ் படைகள் வருவதைத் தடுக்க, கோட்டை வாசல்கள் அடைக்கப்பட்டன.

இதற்கிடையில், ஆற்காடு படைத்தளத்துக்கு விரைந்த கேப்டன் ஸ்டீவன்சன், புரட்சி தகவலை கர்னல் கில்லஸ்பியிடம் தெரிவித்தார், காலை 7 மணிக்குப் புறப்பட்ட கில்லஸ்பியின் படைகள், இரண்டு மணிநேரத்தில் வேலூர் கோட்டைக்கு வந்தன. நுால் ஏணிகளால் மதில்களைத் தாண்டியும், கதவுகளை 'உடைத்தும் கோட்டைக்குள் புகுந்தனர்.

அடுத்த இரு மணிநேரத்துக்கு கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு. கொத்துக்கொத்தாக இந்திய வீரர்கள் வீரமரணம். சிக்கியவர்களை சுவரோரமாக வரிசையாக நிறுத்தி சுட்டு படுகொலை செய்தனர். ராணுவ கோர்ட் விசாரணைக்குப் பின் 6 பேர், பீரங்கி முனைக்குள் வைத்து படுபாதகக் கொலை; 5 பேர் சுட்டுக்கொலை; 8 பேருக்கு தூக்கு. பலி எண்ணிக்கை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. சில ஆய்வுகள்படி, 200 பிரிட்டிஷ் வீரர்களும் 600 இந்திய வீரர்களும் பலி.

விளைவுகள்

புரட்சியை வெற்றிகரமாக ஒடுக்கிய கில்லஸ்பிக்கு 7 ஆயிரம் பகோடாக்கள் (அந்த காலத்து பணம் ) சன்மானம்; புரட்சி பற்றி முன்கூட்டியே தகவல் அளித்த போது, பைத்தியம் என்று இந்திய அதிகாரிகளால் முத்திரை குத்தப்பட்டு கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட முஸ்தபா பெய்க் என்ற வீரர் விடுவிக்கப்பட்டு, அவருக்கு 2 ஆயிரம் பகோடாக்கள் சன்மானம், பதவி உயர்வு.

கவர்னர் வில்லியம் பென்டிங், தலைமை தளபதி சர் ஜான் கிராடாக், துணை தளபதி ஆக்நியூ ஆகியோர் இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்பட்டனர்.

வேலூர் புரட்சியில் ஈடுபட்ட 3 படைப்பிரிவுகளும் கலைப்பு.

ராணுவத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் வாபஸ்.

திப்பு குடும்பம் கல்கத்தாவுக்கு மாற்றம்.