ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நாவிதர் தெருவில் சவுடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் அருகில் ராஜா(35) என்பவர் வீடு உள்ளது. இவரது வீட்டின் வெளிப்புற பகுதியில் சிசிடிவி கேமரா உள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் தூக்கத்தில் இருந்து கண் விழித்த ராஜா, தற்செயலாக தனது வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்துள்ளார். 

அப்போது ஒரு மர்ம ஆசாமி, சவுடேஸ்வரியம்மன் ேகாயிலுக்குள் செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் அக்கம் பக்கத்தினரை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு சென்றார். இவர் கோயிலுக்குள் சென்ற நிலையில் உடன் வந்தவர்கள் கோயில் கதவை வெளிப்பக்கமாக மூடினர். 

பொதுமக்கள் வந்துள்ளதை அறிந்த மர்ம ஆசாமி வெளியே தப்பியோடினார். அவரை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஆசாமி, தான் கொண்டு வந்த கடப்பாரையால் தாக்கிவிட்டு ஓடினார். ஆனால் பொதுமக்கள் விரைந்து சென்று அந்த மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதற்கிடையில் மர்ம ஆசாமி தான் வைத்திருந்த கடப்பாரையால் தாக்கியதில் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்(54) என்பவரின் தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இந்நிலையில் பிடிபட்ட ஆசாமியை பொதுமக்கள் ஆற்காடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் பெரிய காஞ்சிபுரம் கோரிமேடு பகுதியை சேர்ந்த ரவீந்திரன்(40) என்பதும், இவர் கோயில் உண்டியலை உடைத்து திருட கடப்பாரையுடன் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.