திருப்பத்தூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி அவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Student of Arcot Engineering college arrested for the link had with Terrorist Organization ISIS


திருப்பத்தூர்: ஆம்பூர் நீலக்கொல்லை மசூதி பகுதியை சேர்ந்தவர் அனாஸ் அலி. இவர் ஆற்காட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை நேற்று (ஜூலை 30) காலை 4.50 மணியளவில் ஆம்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து விசாரணைக்காக மத்திய உளவுத் துறையினர் வேலூர் மாவட்டம் அணைகட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர், காவல் நிலையத்தில் மாணவனிடம் சுமார் 14 மணி நேரம் மத்திய உளவுத்துறை (IB), மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு (SIU) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த மாணவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாகவும், மேலும் அந்த இயக்கங்களின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவற்றை விரும்பியும் (Like), பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவையும் அதன் கூட்டுறவு நாடுகளையும் இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்றும் அதற்காக ஆம்பூரில் முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய வேண்டும் எனவும் அவர் திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும், இஸ்லாமியர் அல்லாதவர்களை மிரட்டும் வகையில் அவர்களின் வீட்டை குண்டுவைத்து தகர்க்கவும் கூட்டுச் சதி செய்து திட்டமிட்டு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இணைவது குறித்த கோப்புகளையும் அவர் சேகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மத்திய உளவு துறையினரின் தொழில் நுட்ப பிரிவு அதிகாரிகள், விசாரணையின் மூலம் அவரிடம் 2 செல்போன்கள், 1 லேப்டாப் இருப்பதை கண்டறிந்தனர்.

பின்னர், மாணவர் அனாஸ் அலியை ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவலர்கள், ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதனையடுத்து, மாணவர் மீது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து இந்தியாவின் முக்கிய பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டி, அதற்கான ஆயுதங்களை வீட்டில் தயார் செய்து வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டி 8 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.