திருட சென்ற இடத்தில் அழுத குழந்தையின் வாயையும், மூக்கையும் அழுத்தி மூச்சை திணறடித்து கொலை செய்து கிணற்றில் வீசிச் சென்ற கொடூர திருடனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கூடுதலாக 7 ஆண்டு சிறை மற்றும் ? 26 ஆயிரம் அபராதமும் விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த நரசிங்கபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சாந்தி(22). இவர் கடந்த 2017ம் ஆண்டு 18ம் தேதி வாலாஜா தாலுகா போலீசில் அளித்த புகாரில் தனது கைக்குழந்தை பொன்மணி காலையில் எழுந்து பார்த்தபோது மாயமாகி இருந்ததாக புகார் அளித்தார். 

மேலும் அந்த புகாரில், குழந்தை காணாமல் போன அதே சமயம் தனது கணவரின் செல்போனும், சட்டைப் பையில் இருந்த பணம் திருட்டு போயிருந்ததாகவும், தனது குழந்தையை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

அதன்பேரில் வாலாஜா தாலுகா போலீசார் வழக்கப்பதிவு செய்து காணாமல் போன குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில் நரசிங்கபுரம் அடுத்த அல்லிகுளம் கிராம விவசாய கிணற்றில் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் குழந்தை மூச்சு திணறடித்து கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனால் குழந்தை மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை கொலை செய்து கிணற்றில் வீசியது, வாலாஜா அடுத்த மாந்தாங்கல் காந்தி நகரை சேர்ந்த முனுசாமி(52) என்பது தெரியவந்தது.

சம்பவத்தன்று மனோகரன் வீட்டுக்கு முனுசாமி திருடசென்றபோது குழந்தை அழுததால், அந்தகுழந்தையின் வாயை மூக்கையும் பொத்தி செல்போனை திருடி சென்றதும், மூச்சுத்திணறி குழந்தை இறந்ததால் கிணற்றில் வீசி சென்றதும் தெரிய வந்தது.

இந்த வழக்கு விசாரணை ராணிப்பேட்டை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், மூச்சுத்திணறடித்து குழந்தையை கொன்று கிணற்றில் வீசிய குற்றவாளி முனு சாமிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கூடுதலாக 7 ஆண்டு சிறைத்தண்டனையும், 26 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.