Panchayat president's son killed after two-wheeler collides with lorry

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த ஒதியத்தூர் சர்ச் தெருவை சேர்ந்தவர் கிளாடியஸ் ஜோசப். இவர் ஒதியத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது மகன் சாம் ஜோசப் (வயது 23). மருத்துவத்துறையில் டிப்ளமோ படித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை தனது நண்பனை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வேலூர் சென்றுள்ளார். 

மீண்டும் இரவு 11 மணிக்கு வீடு திரும்பினார். பள்ளி கொண்டாவை அடுத்த இறைவன் காடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் சாம்ஜோசப் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் சாம் ஜோசப் குடல் சரிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானர். 

இதுகுறித்து லாரி டிரைவர் பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். 
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்து நடந்தது குறித்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். 

தொடர்ந்து பலியான சாம்ஜோசப் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஊராட்சி மன்ற தலைவர் கிளாடியஸ் ஜோசப் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.