ஆடி மாதம் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தாலும், இந்த மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. ஆடி கிருத்திகை அன்று, முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம்.

அதன்படி ஆடி கிருத்திகை முன்னிட்டு நேற்று முன்தினம் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பால், பன்னீர், புஷ்ப, மயில் மற்றும் அன்னக்காவடிகளை எடுத்து சென்று முருகனை வழிபட்டனர்.

இந்நிலையில் திருப்பத்தூர், வாணியம்பாடி. ஆம்பூர், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, ஆந்திரா மாநிலம் சித்தூர் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வழியாக திருத்தணிக்கு கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருத்தணிக்கு சென்றனர்.

இவ்வாறு திருத்தணி கோயிலுக்கு சென்ற வாகனங்களை சோளிங்கர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட திருத்தணி ரோடு கால்நடை மருத்துவமனை அருகே ஒரு கும்பல் போலீஸ் தடுப்பு வேலிகளை அமைத்து அவ்வழியாக சென்ற ஏராளமான வாகனங்களை மடக்கி ஒரு வாகனத்திற்கு 30, 50 என வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சோளிங்கர் அருகே உள்ள பஞ்சகண்டநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் சென்ற வாகனத்தையும் மடக்கி பணத்தை வசூல் செய்துள்ளனர். இதுகுறித்து சுதாகர் சோளிங்கர் நகராட்சி ஆணையர் பரந்தாமனிடம் செல்போனில் புகார் தெரிவித்தார்.

அதற்கு நகராட்சி ஆணையர் எழுத்து மூலமாக புகார் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினார்.

இதை அடுத்து திருத்தணிக்கு செல்லும் வாகனங்களை மடக்கி வசூல் வேட்டையில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுதாகர் புகார் மனு எழுதி நகராட்சி ஆணையருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார். இதையடுத்து நகராட்சி ஆணையர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் திருத்தணி ரோடு பகுதிக்கு சென்று வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபர்களை எச்சரித்து அனுப்பிவைத்தனர்.