பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக ட்விட்டர் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,269 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 18,282 பேர் தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திகொண்டார். அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

1. நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.#COVID19 — Dr S RAMADOSS (@drramadoss) July 13, 2022

கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.