காவேரிப்பாக்கத்தை அடுத்த சிறுவளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை சுற்றி இருந்த சீமை கருவேல புதர்களை கலக்டர் பாஸ்கர பாண்டியனே அகற்றினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சிறுவளையம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டார். பின்னர் அவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு மதிய உணவை சாப்பிட்டு பார்த்து உணவின் சுவை குறைவாக உள்ளதாக தெரிவித்து, உங்கள் வீட்டில் இது போன்ற உணவுகளை சமைப்பீர்களா? தயவு கூர்ந்து நல்ல சுவையான உணவை சமைக்க வேண்டும் என அங்கன்வாடி ஊழியரிடம் கேட்டுக் கொண்டார்.
குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறைகள் பழுதடைந்து உள்ளது என கலெக்டரிடம் தெரிவித்தனர். இதனை ஏன் சரி செய்யவில்லை என ஊராட்சி மன்ற தலைவரிடம் கலெக்டர் கேட்டுக்கொண்டார். குழந்தைகள் அரசு மையத்தில் படிக்க வரும் பொழுது சரியான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தொடர்ந்து அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் அடர்ந்த புதர்கள், சீமை கருவேல மரங்கள் நிரம்பி இருந்ததை பார்த்து அதனை அகற்ற ஊர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார். அதற்கு 100 நாள் பணியாளர்கள் இல்லை என தெரிவித்தனர். இதனை கேட்ட கலெக்டர் அனைத்தையும் அரசே செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், கோவில்கள் போன்ற பொது இடங்களில் நீங்களாகவே முன்வந்து ஒன்றிணைந்து சமூக அக்கறையுடன் செய்ய பழகுங்கள்.

புதர்களை அகற்றினார்

இளைஞர்களை அதற்காக ஊக்குவியுங்கள். இதை எதையுமே செய்யாமல் ஒவ்வொன்றுக்கும் அரசு செய்து கொடுக்க வேண்டும் நிதி ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து நாங்கள் வரும்பொழுது குறை சொல்வது வாடிக்கையாக வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்றார்.

இப்பொழுது நீங்கள் இதை செய்வீர்களா என பொதுமக்களிடம் கேட்டதற்கு உடனடியாக பதில் இல்லை என்றவுடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அருகில் இருந்த வீட்டில் வெட்டுக் கத்தியை கொண்டு வரச் சொல்லி நானே முட்புதர்களை வெட்டுகிறேன் என்று தெரிவித்து தானே களத்தில் இறங்கி சீமை கருவேல முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.