ஆடி மாதம் பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதமாகும். ஆடி மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய விழாக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆடி மாதம் பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதமாகும். சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில் விழாக்கள் வரிசை கட்டி நிற்கும். ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. ஆடி மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய விழாக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆடி தபசு | August 11, 2022 - Thursday - Aadi Thabasu Sri Gomathi Ambal Thabasu Katchi


 ஒரு முறை அம்பாள், சிவபெருமானிடம் ஒரு வரம் கேட்டாள். அதாவது விஷ்ணுவுடன் இணைந்து காட்சி தர வேண்டும் என்பது அவளது கோரிக்கை. உடனே சிவபெருமான், “பொதிகை மலையில் புன்னை வனத்தில் தவம் புரிந்தால் அந்தக் காட்சி காணக்கிடைக்கும்” என்றார். அம்பாளும் ஒற்றைக்காலில் ஊசிமுனையில் நின்று தவம் செய்தாள். இதையடுத்து ஆடி பவுர்ணமி நாளில், பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றி ‘சங்கர நாராயணர்’ கோலத்தில் இறைவன் காட்சி அளித்தார். அம்பிகை கோமதி அம்மனாக வடிவம் கொண்டு, அந்தக் காட்சியைக் கண்டு தரிசனம் செய்தார். இந்த விழா இன்றும் பாரம்பரியமாக சங்கரன்கோவில் திருத்தலத்தில் நடைபெற்று வருகிறது.

ஆடிப்பூரம் | August 1, 2022 - Monday - Aadi Pooram - Sri Andal Jayanthi


அம்பாளுக்குரிய விசேஷ தினங்களில் ஒன்று ஆடிப்பூரம். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். இந்த சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகுசிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும்.

ஆடி அமாவாசை | July 28, 2022 - Thursday - Aadi Amavasai


ஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாகக் கொண்டாட வேண்டும். அன்றைய தினம் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் போன்றவற்றை தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன், மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் போன்றவற்றை தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரர்களை, தாய்- தந்தையை இழந்தவர்கள் அமாவாசை தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பான ஒன்றாகும். 

தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால், ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆடி கார்த்திகை | July 23, 2022 - Saturday - Aadi Kiruthigai


கார்த்திகை நட்சத்திரம், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் செலுத்த முக்கிய நாளாக இந்த நாளை தேர்வு செய்கிறார்கள். ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆடி செவ்வாய்.. ஆடி வெள்ளி | Aadi Chevvai , Aadi Velli


‘ஆடி செவ்வாய் தேடிக்குளி’ என்பார்கள். ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை தோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும் என்பதே இந்த பழமொழி கூறும் தத்துவம். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் பலரும், ‘அவ்வையார் விரதம்’ கடைப்பிடிப்பார்கள். கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கைகூடி வரவும் விரதம் மேற்கொள்வார்கள்.

ஆடி பெர்க்கு | August 3, 2022 - Wednesday - Aadi 18 - Pathenettam Perrukku


 ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து, காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள். இந்த விழாவானது ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்படும். காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. தாமிரபரணி கரையிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.