2nd class girl trying to set a world record, requests help from the district administration

உலக சாதனை படைக்க துடிக்கும் சோளிங்கர் அருகே பைவலசை கிராமத்தைச் சேர்ந்த 2ம் வகுப்பு மாணவிக்கு மாவட்ட நிர்வாகம் உதவிட பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள பைவலசை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சத்யா. இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் சஹானா(5). இவர் சோளிங்கர் பகுதியில் உள்ள திவ்ய சைதன்யா மெட்ரிக் பள்ளியில், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறு வயது முதலே மற்றவர்கள் சொல்வதை உள்வாங்கி உடனுக் குடன் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இவர். பள்ளி பாடங்களை விரைவாக படித்துள்ளார். இதனால் சராசரி வயதுக்கு முன்பாகவே சஹானாவை எல்.கே.ஜி வகுப்பில் ஆசிரியர்கள் சேர்த்துள்ளனர். மேலும் இவரது திறமையை ஊக்குவிக்கும் வகையில் அவரது பள்ளி ஆசிரியர்கள் இவருக்கு செயல் திறனை கற்றுக் கொடுத்துள்ளனர்.

உலக சாதனை செய்ய வேண்டும் என்று, சிறு வயதில் இருந்தே அவரது பெற்றோர் சொல்லி, சொல்லி வளர்த்து வருகின்றனர். இதன் காரணமாக சிறுமி சஹானா உலக நாடுகளின் பட்டியல் மற்றும் அதன் தலைநகரங்களின் பெயர்கள், 60 தமிழ் வருடங்களின் பெயர்கள், உலக அதிசயங்கள் மற்றும் அவற்றின் நாடுகள், தமிழ் மாதங்கள் ஆகியவற்றை மூன்றரை நிமிடத்தில் கிடுகிடுவென கூறி அசத்தி வருகிறார்.

இது தவிர எந்த பெயர்களை உச்சரித்தாலும் அந்தப்பெயருக்கான ஆங்கில எழுத்துக்களை அடுத்த நொடியே பிழையின்றி சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். 2ம் வகுப்பு பயிலும் சிறுமி சஹானா. கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும். என்பதை லட்சியமாக கொண்டு அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால் கின்னஸ் சாதனை படைப்ப தற்கான வழிமுறைகள் எப்படி என்பது தெரியாமல் சிறுமியும், அவரது பெற்றோரும் தவித்து வருகின்றனர்.

எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் கின்னஸ் சாதனை படைக்க  விரும்பும் சிறுமி சஹானாவுக்கு, அதற்கான பயிற்சியினை வழங்கி, கின்னஸ் சாதனை படைக்க உதவி செய்ய வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கோரிக்கை வைக்கின்றனர்.