ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருத்தணிக்கு வியாழக்கிழமை (ஜூலை 21) முதல் 24-ஆம் தேதி வரை 170 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, வேலூரில் இருந்து 55, ஆற்காட்டிலிருந்து 30, சோளிங்கரிலிருந்து 10, திருப்பத்தூரிலிருந்து 30, ஆம்பூர், பேர்ணாம்பட்டிலிருந்து தலா 10,குடியாத்தத்திலிருந்து 25 என மொத்தம் 170 சிறப்புப் பேருந்துகளை இயக்க விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றில் வேலூரிலிருந்து திருத்தணிக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் அனைத்தும் மக்கான் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன. மேலும், காஞ்சிபுரம், தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்தக்குறிப்பிட்ட நாள்களில் மட்டும் வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்று ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.