ஆவணி அவிட்டம்' என்பது ஆடி மாத அமாவாசைக்குப் பிறகு வரக்கூடிய அவிட்ட நட்சத்திர நாளில் வரக்கூடிய விழாவாகும். 

வரலட்சுமி விதம், காராடையான் நோன்பு போன்று பல விரதங்கள் பெண்களுக்கு உள்ளன. ஆண்களுக்காக இருக்கும் விழா ஆவணி அவிட்டம். 

வேத பாடங்களைப் பாராயணம் செய்து படிப்பதற்கு உத்தராயண காலத்தையும் அதன் உட்கருத்துக்களை, உப நூல்களையும் அறிந்து கொள்வதற்கு தக்ஷிணாயன காலத்தையும் நம் முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள். அப்படி ஆண்டு முழுவதும் படிக்கும்போது ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்திட, ஆவணி அவிட்ட நாளில் வழக்கம்போல் காலையில் எழுந்ததும் இறைவனைத் துதி செய்யவேண்டும். 
பின்னர், நீராடி புத்தாடைகள் உடுத்தி சந்தியா வந்தனம், பிராணயாமம் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். காமோ கார்ஷீத் ஜபத்தை 108 முறை சொல்லவேண்டும்.

இதன் பிறகு எல்லா சேத்திரங்களில் உள்ள தெய்வங்கள் எல்லா நதிகளின் தேவியர்களையும் அழைத்து மகா சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும். மீண்டும் ஆற்றில், குளத்தில், வீட்டில் என அவரவர் வசதிக்கேற்ப நீராடி புது ஆடைகள் அணியவேண்டும். இரண்டு முறை நீராட வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

அதன் பிறகு, தந்தை, ஆச்சார்யர், குரு இவர்களில் யாரேனும் ஒருவரின் வாயிலாக பூணூலை அணிவிக்கவேண்டும். திருமணமாகாதவர்கள் ஒரு பூணூலையும் திருமணமானவர்கள் இரண்டு பூணூலையும் திருமணமான பின் தந்தையை இழந்தவர் மூன்று மூன்று பூணூலையும் அணியவேண்டும். அதன் பிறகு ஶ்ரீ காயத்ரி ஜபம் சொல்ல வேண்டும். உலகம் சிறக்கவும் நாடு சிறக்கவும் தன் நகரம் சிறக்கவும், தனது கிராமம் சிறக்கவும் தனது வீடு சிறக்கவும் ஶ்ரீ காயத்ரி ஜபத்தைச் சொல்ல வேண்டும். ஶ்ரீ காயத்ரி மந்திரத்தை தினம்தோறும் சொல்வது மிகவும் முக்கியம். சொல்லாலும் மனதாலும் செயலாலும் தீங்கிழைக்காத வைராக்கியத்தை மேற்கொள்ளவேண்டும். வைராக்கியம் இருந்தால் எல்லாம் சித்திக்கும் வைராக்கியம் போனால் சகலமும்போய்விடும் என்பதை மனதில் இருத்தவேண்டும் என்பதே ஆவணி ஆவிட்டத்தின் நோக்கம்'' 

ஆவணி அவிட்டம் விரத பலன்களும்.

ஆவணி அவிட்டம் விரதம் கடைப்பிடிக்கும் முறை:

ஸ்ரீகணபதி பூஜையுடன் ஆவணி அவிட்ட விரதத்தைத் துவங்கி, புண்யாவாகனம் செய்த பின், பஞ்சகவ்யம் அருந்தி உடல், மனம் மற்றும் இருப்பிடங்களைத் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த வேளையில் கிழக்கு நுனியாக வாழை இலை போட்டு, அதில் அரிசி பரப்பி 7 கொட்டைப் பாக்குகள் வைத்து, அதில் சப்தரிஷிகளை ஆவாஹனம் செய்து, தீபாராதனை செய்து, நைவேத்தியம் படைக்க வேண்டும்.
ஆவணி அவிட்டத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரமும் அதன் பலன்களும்.

பின், சப்தரிஷிகளை வேண்டி ஹோமம் செய்ய வேண்டும்.

அதில் அரசு அல்லது புரசு சமித்துக்கள் (குச்சிகள்), சத்துமாவு, நெய், நெல்பொரி ஆகியவற்றை மந்திரம் சொல்லி அக்னியில் இட வேண்டும். பின், புதிய பூணூல் அணிந்து கொள்ள வேண்டும்.
'உபநயனம்' எனப்படுகிறது. உபநயனம் என்றால் 'நமக்கு துணையாக வரும் இன்னுமொரு கண்' என்று பொருள். ஞானம் என்னும் கல்வி அறிவை பெற்றால் மட்டுமே ஒருவன் கண் பெற்ற பயனைப் பெறுகிறான் என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். கடவுளைப் பற்றி அறியும் அறிவே உயர்ந்த அறிவாகும். அதனால் பூணூல் அணியும் சடங்கினை பிரம்மோபதேசம் என்று குறிப்பிடுவ துண்டு. 

பஞ்சபூதங்களையும் வழிபடுவது உத்தமம். திருமணம் ஆகாத ஆண்கள் பூணூலை குருவிற்கும், வயதில் மூத்தோருக்கும் தானமாகத் தரலாம். புதிய பூணூல் அணிந்த அனைவரும் முதலில் தேவர்களுக்கும், பின்னர் ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்கின்றனர்.

இவர்களில் தந்தையை இழந்தவர்கள் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்தபிறகு தங்களுடைய பிதுர்களுக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும். பிறகு குருவுக்கும் வயதில் மூத்தோருக்கும் வெற்றிலை பாக்கு, பழம் மற்றும் அவர்கள் சக்திக்குத் தகுந்தாற்போல் காணிக்கைகளை அளித்து அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற வேண்டும்.

தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர். இந்தப் பூணூலும் கள்ளப்பூணூல், பிரம்மச்சாரி பூணூல், கிரஹஸ்தர் பூணூல், சஷ்டிஅப்த பூர்த்தி பூணூல் என்று நான்கு வகைப்படும்.

பூணூல் போட்டுக்கொள்ளும் ஆண் பாலகன் எனும் நிலையில் இருந்து பிரம்மச்சாரி எனும் அந்தஸ்த்திற்கு உயர்த்தப்படுகிறான். அதன் பின் அவன் வேதங்கள் கற்றுத்தேற வேண்டும். பிரம்மச்சாரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டும். உபநயன விழா நடத்தி பூணூல் போடப்பட்டுவிட்டால் அதை கழற்றக் கூடாது. ஆனால், விழா ஏதுமினறி ஆவணி அவிட்டம் தினத்தன்று மட்டும் சாஸ்திரத்துக்காகப் போடப்படும் பூணூலை கழற்றி விடலாம். திருமணமாகாதவர்களுக்கு பிரம்மச்சாரி பூணூல் போடப்படும்.
பிரம்ச்சாரி பூணூலிலும், 3 நூல்கள் இணைத்து கட்டப்பட்டு அதன் நடுவில் பிரம்ம முடிச்சு போடப்பட்டிருக்கும். திருமணமானவர்களுக்கு கிரஹஸ்தர் பூணூல் போடப்படும். இதில் ஆறுநூல்கள் இணைந்து கட்டப்பட்டிருக்கும். 60 வயதான பின், சஷ்டி அப்த பூர்த்தி என்று அழைக்கப்படும் அறுபதாம் கல்யாணம் முடிந்தவர்களுக்கு சஷ்டி அப்தி பூணூல் அணிவிக்கப்படும. இதில் 9 நூல்கள் இணைத்து கட்டப்பட்டிருக்கும்.

இந்த விரத நியமங்களைக் கடைப்பிடித்து, பூணூல் அணிந்து கொண்டவர்களை எவ்வித துன்பமும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறையும்.

யஜ்ஞோபவீதம் மந்திரம்
பூணூல் மாற்றும் போது கூறவேண்டிய யக்னோபவீதம் மந்திரம்
ஆவணி அவிட்டமான தினத்தில் காலையிலேயே எழுந்து நீராடி, புதிய பூணூலை எடுத்து முடிபோட்டு ஒரு பஞ்சபாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு கீழ்கண்ட முறைகளில் யக்னோபவீத மந்திரங்களை கூற வேண்டும்.

ஆசமனம்: 
ஒம் அச்யுதாய நம: 
ஒம் அனந்தாய நம: 
ஒம் கோவிந்தாய நம:
விக்னேச்வர த்யானம்:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே
ப்ராணாயாமம்;
ஓம் பூ:, ஓம் புவ:, ஓம் ஸூவ: ஓம் மஹ:,
ஓம் ஜந:, ஓம் தப:, ஓம் ஸத்யம், ஓம் தத்ஸ
விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி,
தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம்.
ஓம் ஓம் ஓம்
என்று வலது காதைத் தொடவேண்டும்.
ஸங்கல்பம் மந்திரம்,
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா
ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், ச்’ரௌதஸ்மார்த்த,
விஹிதஸதாசார, நித்யகர்மானுஷ்டான,
யோக்யதாஸித்தயர்த்தம், ப்ரஹ்மதேஜ: அபிவ்ருத்யர்த்தம்,
யஜ்ஞோபவீத்தாரணம் கரிஷ்யே.
என்று ஜலத்தை தொட்டு யஜ்ஞோபவீத்தாரண
மஹா மந்த்ரஸ்ய, பரப்ரஹ்ம ரிஷி:
என்று தலையில் தொட்டு த்ருஷ்டுப் சந்த:
என்று மூக்கு நுனியில் தொட்டு பரமாத்மா தேவதா:என்று மார்பில் தொட்டு
யஜ்ஞோபவீத்தாரண விநியோக:
என்று பூணுல் முடிச்சு வலது உள்ளங்கையில் மேலே இருக்கும் படியும் இடது கை
ஜலமிருக்கும் பஞ்ச பாத்திரத்தில் வைத்துக் கொண்டு
யஜ்ஞோபவீதம், பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத்,ஆயுஷ்யம்
அக்ரியம் ப்ரதிமுஞ்ச சு’ப்ரம், யஜ்ஞோபவீதம் பலமஸ்துதேஜ: ஒம்
என்று கூறி புதிய பூணுலைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

பிரம்மசாரிகள் 1பூணுல், திருமணம் ஆனவர்கள் 2 பூணுல் பெரியோர்கள் 3 பூணுல் எண்ணிக்கையில் அணிந்து கொள்ள வேண்டும். சில குலத்தினருக்கு மூன்று முடி பூணுல் அணிந்து கொள்ளும் பழக்கம் உள்ளது. ஆசமனம்: உபவீதம் பின்னதந்து ஜீர்ணம் கஸ்மல துஷிதம் விஸ்ருஜாமி ப்ரஹ்ம வர்ச்ச: ஜலேஸ்மின் தீர்க்காயுரஸ்துமே ஒம் என்று ஜெபித்து பழைய பூணுலைக் கழற்றி வடதிசையிலோ அல்லது ஜலத்திலோ போட வேண்டும். இதன் பிறகு மீண்டும் ஆசமனம் செய்யவும், பிரம்மச்சாரிகள் இடுப்புக்கயிறு, தண்டம்-மந்திரம் சொல்லி அணிய வேண்டும்.
தேவ காரியங்களில் பூணூல் அனியும் முறைகள்.

சில சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்
தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். 
பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும்.
பக்தியோடு செய்வது யக்ஞம் ; 
சிரத்தையோடு செய்வது சிராத்தம்.
தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.
இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன.
சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. 

பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபே¬க்ஷயும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோபவீதம் இல்லை.
ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ணி வேண்டும் என்று சொல்கிறேன்:
கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். 
வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு.
தெற்குதான் பித்ருக்கள் இருக்கும் பக்கம். ' தென்புலத்தார் ' என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா ? தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம். ' உத்தராயணம் ' என்பதில் மூன்று சுழி ' ண ' போட்டும், ' தக்ஷிணாயனம் ' என்னும்போது இரண்டு சுழி ' ன ' என்பது ' ண ' வாக மாறிவிடும். இது வியாகரண விதி.
உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள்தான். அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம் அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.
" பிரதக்ஷணம் பண்ணுவது " என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கி என்றுதான் அர்த்தம். முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்த்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.
இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.
தேவகாரியம், பித்ரு காரியம் இரண்டும் செய்யாத மற்ற வேளைகளில், அதாவது உத்யோக வேளை முதலானதுகளின் போது, பூணூலை ஒரு தோளின் மேலேயும் இல்லாமல், கழுத்திலிருந்தே மாலைமாதிரித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். இதை யாரும் அனுஸரிக்கக் காணோம். பித்ரு காரியம் தவிர மற்ற எல்லா ஸமயங்களிலும் இடது தோள் மேலேயே யக்ஞோபவீதத்தைப் போட்டுக் கொள்கிறார்கள்.
தேவ காரியத்தின் போது இடது தோளுக்கு மேல் பூணூல் இருப்பதற்கு ' யக்ஞோபவீதம் ' என்றும், பித்ரு காரியத்தின் போது வலது தோளுக்கு மேல் இருப்பதற்கு ' ப்ராசீனாவீதம் ' என்றும்,
 மநுஷ்யர்களுக்கான லோக காரியங்கள் செய்யும் மற்ற எல்லா ஸமயத்திலும் மாலை மாதிரித் தொங்குவதற்கு ' நிவீதம் ' என்றும் பெயர்.
 பிருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு ஞானி இந்த எல்லாத் தினுஸுக் கர்மாக்களையும் விட்டு விட்டுப் பிச்சைக்கார ஸந்நியாஸியாகப் புறப்படுவதைப் பற்றி வருகிறது. ( III.5.1) .
 அதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும் போது, தேவ-பித்ரு-மநுஷ்ய கர்மாக்களை பண்ணுவதற்காகவே க்ருஹஸ்தனுக்குப் பூணூல் இருக்கிறதென்றும், 
எனவே, இந்த கர்மாக்களை விட்டுவிட்ட ஸந்நியாஸிக்குப் பூணூல் கிடையாதென்றும் ச்ருதி வாக்யங்களைக் காட்டி ஸ்தாபிக்கிறார். அந்த அலசலில், " நிவீதம் மநுஷ்யாணாம் " - மநுஷ்யர்களுக்கான காரியத்தின்போது (பூணூலை) மாலையாகப் போட்டுக்கொள்ள வேண்டும் , என்று ச்ருதி ப்ரமாணமே இருப்பதாகக் காட்டியிருக்கிறார்.
ஆனாலும் நடைமுறையில் பலகாலமாகவே அந்த வழக்கம் எடுபட்டுப் போயிருக்கிறது.
சந்தியாவந்தனம் :
நாம் பிச்சைக்காரனுக்கு அரிசி போடுகிறோம். ஏதாவது ஸொஸைட்டிக்கு நன்கொடை கேட்டால் நூறு, இருநூறு ரூபாய் கொடுக்கிறோம். பரோபகாரம் பண்ணினால் புண்ணியம் உண்டென்று பண்ணுகிறோம். 
சில சமயங்களில் உபகாரம் பண்ண வேண்டாமென்று தோன்றுகிறது. புண்ணியம் வேண்டாமென்று நினைக்கிறோம். அப்பொழுது முடியாது என்று சொல்லி விடுகிறோம். கடமையைச் செய்ய வேண்டியதுதான்; அதற்குமேல் தானம், தர்மம் இவை போன்றவைகளைச் செய்ய முடியாவிட்டால் பெரிய தோஷம் என்று சொல்ல முடியாதுதான்;
ஒருவனிடம் நாம் 500 ரூபாய் கைமாற்று வாங்கி இருந்தோம். அதைத் திருப்பித் தராமல் அவனிடம், “உனக்கு 500 ரூபாய் கொடுக்கிற புண்ணியம் எனக்கு வேண்டாம்” என்றால் அவன் விடுவானா? ‘நான் புண்ணியத்திற்கு வரவில்லை. கொடுத்ததைக் கேட்கத்தான் வந்தேன்.’ என்று சொல்லுவான். கேஸ் போட்டு, நமக்கு அதிகப்படி தண்டனையும் வாங்கி் வைப்பான்.
 இது “அகரணே ப்ரத்யவாய ஜனக”த்தைச் சேர்ந்தது.
அதைப் போலத்தான் ஸந்தியாவந்தனமும். ஸந்தியாவந்தனம் பண்ணமாட்டேன் என்பது வாங்கின கடனைத் திருப்பித் தர முடியாது என்கிறதைப் போல.
தமிழில் ஸந்தியாவந்தனத்தைக் காலைக் கடன், மாலைக் கடன் என்றே சொல்வார்கள். அந்தப் பெயர்கள் மிகவும் அழகாய் இருக்கின்றன.
கடன் வாங்கின திருஷ்டாந்தம் சொன்னால் போதாது. யார் எங்கே கடன் வாங்கினார்கள்? ஸந்தியாவந்தனம் யாரிடம் கடன் வாங்கப்பட்டது?’ 
என்று சிலர் கேட்கலாம்.
வேதத்தில் “தைத்திரீய ஸம்ஹிதை” (Vl-3) யில்
பிறக்கும் பொழுதே மூன்று கடனோடு பிறந்திருக்கிறான்.
ரிஷிருணம், தேவருணம், பிதிர்ருணம் 
என்று மூன்று கடன்கள் உண்டு என்று சொல்லியிருக்கிறது.
வேதம் ஓதுவதால் ரிஷிக்கடனும், 
யாகமும் பூஜையும் ஸந்தியாவந்தனாதி உபாஸனைகளும் பண்ணுவதால் தேவர்கடனும், 
தர்ப்பணம் சிராத்தம் இவற்றால் பிதிர்கடனும் தீர்கின்றன என்கிறது.
கடன் வாங்கினது நமக்குத் தெரியாது. தெரியாததை வேதம் சொல்லியிருக்கிறது. அதைக் கொண்டு நாம் யுக்தி பண்ணிப் பார்க்க வேண்டும். நம்பிக்கையுள்ளவர்களுக்கு அதை அநுஸரித்த யுக்தி தோன்றும்.
 இல்லாதவர்களுக்கு விபரீத யுக்தி தோன்றும்.
அதனால் தினமும் தவறாது ஸந்தியாவந்தனம் செய்வோம்.

பூணூல்

பூணூல் என்பது நம் தோள்மீது உள்ள மூன்று கடன்கள் அல்லது கடமைகளை நமக்கு நினைவூட்டுவதுதான் – பெற்றோருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை, சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமை மற்றும் ஞானத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமை.
இவை மூன்றும் நமக்கு உள்ள கடமைகள் அல்லது கடன்கள். நாம் நம் பெற்றோர்க்கு கடன் பட்டுள்ளோம், நாம் சமூகத்திற்கு கடன்பட்டுள்ளோம், ஞானத்திற்கு – அதாவது நம் குருவிற்கு நாம் கடன்பட்டுள்ளோம். எனவே நமக்கு இந்த மூன்று கடன்களும் இருக்கிறது. பூணூல் நமக்கு இந்த மூன்று கடன்களையும் நினைவு படுத்துகிறது.
கடன் என்று சொல்லும்போது, நாம் ஏதோ ஒரு குறிப்பட்ட அளவு கடன் வாங்கினார் போலவும் அதை நாம் திருப்பித் தரவேண்டிய தேவை இருக்கிறது என்றும் நினைக்கிறோம். ஆனால் இது ஒரு கடமை அல்லது பொறுப்பு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடன் என்ற வார்த்தைக்கு இந்த இடத்தில் அர்த்தம் என்ன? பொறுப்பு! முந்தைய தலைமுறை, வருங்கால தலைமுறை மற்றும் இன்றைய தலைமுறை ஆகியவற்றின் மீது உள்ள உங்கள் பொறுப்பை மறுபார்வை பார்ப்பது. அதனால்தான் நாம் மூன்ற பிரிகள் கொண்டதாக உள்ள பூணூலை நம் தோளில் அணிவது.
இதுதான் அதன் முக்கியத்துவம் – என் உடம்பை தூய்மையாகவும், என் மனதை தூய்மையாகவும் மற்றும் என் வாகை தூய்மையாகவும் நான் வைத்திருப்பேன் – உடல், மனம் மற்றும் பேச்சு ஆகியவற்றில் தூய்மை. ஒரு நூல் நம்மைச் சுற்றி எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு நாளும் நமக்கு நினைவு வருகிறது, ‘ஓ எனக்கு இந்த பொறுப்புகள் எல்லாம் இருக்கிறது’.
பண்டைக்காலத்தில், பெண்களும் பூணூலை அணிய வேண்டியிருந்தது. மேலும், பூணூல் அணிவது ஒரு குறிப்பிட்ட ஜாதிகளுக்கு மட்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. பிராமணர், க்ஷத்ரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்று எல்லோரும் அணிய வேண்டிய வழக்கமிருந்தது; ஆனால் பின்னர் ஒரு சிலருக்கு மட்டும் என்று குறுகிவிட்டது.
பொறுப்பு என்பது எல்லோருக்கும் உண்டு. திருமணமானால் இப்போது ஆறு பிரிகள் கொண்ட பூணூல் அணிகிறார்கள். மூன்று தமக்காகவும், அடுத்த மூன்று தன் மனைவிக்காகவும். மனைவிக்காக இருந்ததை ஆண்கள் தாமே ஏற்றுக் கொண்டார்கள். இது ஒரு ஆணாதிக்க சமூகம்; அவர்கள் ஒரு பெருந்தவறு செய்துவிட்டார்கள். அந்தக் காலத்தில் பெண்களுக்கும் இந்த பொறுப்பை ஏற்கும் சடங்கு இருந்தது. ஆனால் இப்போது ஆண்களே இந்தப் பொறுப்பை திருமணத்திற்கு பிறகு ஏற்றுக் கொள்கிறார்கள். ரக்ஷாபந்தன் தினத்தன்று ராக்கி கட்டுகிறோம். இதை நாம் இப்போது நட்பு வளையம் என்கிறோம் (Friendship band). இந்த சொல்லாடல் இப்போது தற்காலத்தில் ஆங்கிலத்தில் ஏற்பட்டது, ஆனால் நம் நாட்டில் ரக்ஷாபந்தன் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. இது ஒரு பாதுகாப்பு வளையமாக இருந்தது, அதாவது ஒரு சகோதரி தன் சகோதரனுக்கு அளிக்கும் பாதுகாப்பு. எனவே ரக்ஷாபந்தன் என்ற இந்த விழாவில் எல்லா சகோதரிகளும் தங்கள் சகோதரனுக்கு ராக்கி அணிவித்தனர். இதை தன்னுடைய உறவுமுறை சகோதரர்களுக்கு மட்டுமல்லாமல் உண்மையில் எல்லோரையும் தங்கள் சகோதரர்களாக கருதி எல்லோருக்கும் கட்டினர். ஷ்ரவண பூர்ணிமாவில் இது வெகு விமரிசையாய் கொண்டாடப்படுகிறது.
ஷ்ரவன பூர்ணிமாவிற்கு பிறகு வருவது பாதோ பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. பிறகு வருவது அனந்த பூர்ணிமா, அதாவது அளவிட முடியாததை (Infinity) குறிக்கும் பௌர்ணமி. அதன் பிறகு வருவது ஷரத் பூர்ணிமா. அது பெரிய மிக அழகான பௌர்ணமியை குறிக்கும். சிலரது முகம் பிரகாசமாய் ஒளி பொருந்தியதாய் இருந்தால், ‘நீங்கள் ஷரத் சந்திரனைப் போல இருக்கிறீர்கள்’ என்று சொல்வார்கள்.
முழு வருடத்தில் ஷரத் சந்திரன்தான் மிகப் பெரியதும், மிகத் தெளிவானதும் மிக சிறந்ததும் ஆனது. யாராவது தயை நிறைந்து ஆனந்தமாய் இருந்தால், ‘ஷரத் சந்திர நிபானனா’ என்று சொல்வார்கள். நம் தாய்; இறைவி (தேவி) யின் முகம் ஷரத் பூர்ணிமாவைப் போல இருக்கும் என்பார்கள். எனவே இது ஒரு புனிதமான பௌர்ணமி.இதற்கு பிறகு வருவது நிறைய விளக்குகள் ஏற்றி நாம் கொண்டாடும் கார்த்திகைப் பௌர்ணமி. எனவே ஒவ்வொரு பூர்ணிமாவுக்கும் ஒரு முக்கியத்துவம் ஒரு கொண்டாட்டம் உண்டு.ஒரு ஷரத் பூர்ணிமாவில் தான் கண்ணன் கோபியருடன் நடனம் ஆடினான். கோபியர் பலர், ஆனால் கண்ணன் ஒருவன்தான். இருந்தாலும் கண்ணன் பல வடிவம் கொண்டு தங்கள் ஒவ்வொருவருடனும் நடனமாடியதாக உணர்ந்தார்கள் கோபியர்கள். எனவே எல்லோரும் எல்லாம் தாண்டிய ஒரு உயர்ந்த நிலையில் இருந்தார்கள்! ஒவ்வொருவரும் கண்ணன் தங்களுடையவனாக தங்கள் ஒவ்வொருவருடனும் நடனமாடியதாக உணர்ந்தார்கள். ஷரத் பூர்ணிமா இதற்கு பிரசித்தமானது. மக்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.
நிலவின் ஒளியில் பாலை வைத்துவிட்டு பின்னர் அருந்துவார்கள். ஷரத் பூர்ணிமா அன்று கொண்டாட்டம் உண்டு. தங்கள் வாழ்க்கையையே கொண்டாட்டமாக, தினம் தினம் கொண்டாடமுடியாதவர்கள், மாதத்தில் சில நாட்களாவது கொண்டாடவேண்டும். அதாவது, பௌர்ணமி அன்று கொண்டாடினாலே வருடத்திற்கு பனிரெண்டு கொண்டாட்டங்கள் கிடைக்கும்.
மனம் சந்திரனுடன் தொடர்புடையது. அதனால் தான் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் நம் மனம் உயர்ந்தோ அல்லது தாழ்ந்தோ இருக்கிறது. மனம் சந்திரனோடு அவ்வளவு தொடர்புடையது. அதனால் தான் வேதத்தில், ‘சந்த்ரமா மனசோ ஜடா – மனம் சந்திரனில் இருந்து பிறந்தது அல்ல, சந்திரன் மனதிலிருந்து பிறந்தது’, என்று கூறப் பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த நாட்களெல்லாம் மிக முக்கியமானவை. வாழ்கையே மிக முக்கியமானது. இந்த வாழ்கை முழுதும் மிக முக்கியம் என்று ஞானவான்களுக்கு தெரியும் என்று சொல்வேன்.
எனவே இந்த தினத்தில் பூணூல் மாற்றிய பின்னர், ஒரு உறுதி (சங்கல்பம்) எடுத்துக் கொள்கிறார்கள் – அதாவது – ‘நற்புகழும் நல்விளைவும் கொண்ட செயல்கள் செய்யத் தகுந்த திறன்கள் எனக்கு 
அருளப்படவேண்டும்’ என்ற உறுதி. செயல்பட அதற்குத் தகுந்த திறமை வேண்டும். உடல் தூய்மை, பேச்சுத் தூய்மை மற்றும் விழிப்பான உள்ளுணர்வு ஆகியவை இருக்கும்போதுதான் எடுத்த வேலை நிறைவடைகிறது. ஆன்மீகச் செயல்களோ உலகாயமான செயல்களோ, ஒருவர் செயல்பட அதற்கான திறன் வேண்டும். அந்த திறனைப் பெற நமக்கு அதற்கான பொறுப்பு இருக்க வேண்டும். பொறுப்பான ஆட்களே ஒரு வேலையை செய்யத் தகுந்தவர்கள். என்ன அழகான ஒரு செய்தி. பொறுப்பில்லாத ஒருவரிடம் கொடுக்கப்பட்ட வேலை இழப்பில் தான் முடியும். பொறுப்பில்லாத ஒருவரிடம் உங்கள் சமையலறை பொறுப்பை கொடுத்து விட்டு மறுநாள் காலையில் சென்றால், ‘காலை உணவு தயாரில்லை’ என்ற பதில்தான் கிடைக்கும். காலை உணவை மத்தியானம் பரிமாறினால் அவருக்கு பொறுப்பில்லை என்றுதான் அர்த்தம். ஆன்மீக வேலையோ அல்லது உலகாயமான வேலையோ,பொறுப்பில்லாத ஒருவர் எந்த வேலையைச் செய்யவும் தகுதி இல்லாதவர். எனவே ஒருவர் முதன் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் தன் வாழ்வில் பொறுப்புகளை எப்படி நிறைவேற்றுவது என்பதுதான். பூணூல் அணியும் சடங்கு (யக்ஞோபவீத சடங்கு) பொறுப்பேற்றுக் கொள்வது எப்படி என்று கற்றுக்கொள்ளத்தான்.

சாதாரணமாக பூணூலை மாற்றக் கூடாது. வாழ்க்கையில் பொறுப்புகள் உண்டு. நான் என்ன செய்தாலும் பொறுப்போடுதான் செய்வேன் – என்ற உறுதி விழிப்புணர்வு கொள்வதே பூணூல் மாற்றும் சடங்கு.

பூணூல் போடுவது எதற்காக?

இந்தக் கலாச்சாரத்தில், பொதுவாக சிறுவர்கள் 11 அல்லது 12 வயது அடைந்தபிறகு, அவர்களுக்கு உபநயனம் என்று சொல்லப்படுகிற பிரம்ம பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்போதும் கூட சில சமூகங்களில் இது தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வேத காலங்களில், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் இருபாலருக்குமே இது செய்யப்பட்டது. ஆனால் மெதுவாக, இதிலிருந்து சிறுமிகள் விலக்கப்பட்டனர். 
நான்தான் பிரம்மன் என்பதை இரகசிய மந்திரத்தின் துணையுடன் உணரச் செய்வதே பிரம்மப் பிரதிஷ்டை. ஒரு சிறுவன், 11 அல்லது 12 வயது அடைந்தவுடன், தனக்குள் தெய்வீகத்தை உணர்வதற்காக பிரம்மப் பிரதிஷ்டை தீட்சை வழங்கப்படுகிறது. உண்மையில் ஒருவர் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் முன், இந்தப் புரிதலில் இருந்தே அந்த அனுபவத்துடன்தான், வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அத்தகைய வாய்ப்பு இப்போது இல்லாமல் போய்விட்டது. 
ஏனெனில், இப்போது மந்திரம் வழங்குபவருக்கும் அந்த மந்திரத்தைப் பற்றித் தெரியவில்லை. இந்த செயல்முறையைப் பெறும் குழந்தைக்கும் நிச்சயமாகத் தெரிய வாய்ப்பில்லை. தற்போது இது வெறும் சடங்காக, உடலைச் சுற்றி ஒரு நூலை மட்டும் அணிவிப்பதுடன் முடிந்து விடுகிறது.
இந்தக் குறிப்பிட்ட வயதில் எதனால் இந்த முறை கடைபிடிக்கப்பட வேண்டும்?
13 அல்லது 14 வயதில் சிறுவர்கள் ஆண், பெண் உறவு பற்றி மெதுவாக தெரிந்து கொள்ள துவங்குகிறார்கள். அப்போது அவர்களுடைய மனம் பல திசைகளிலும் அலைபாய ஆரம்பிக்கிறது. அதனால் அந்த வயதிற்கு முன்பாகவே, அவர்கள் தாங்கள் யார் என்பதை உணர்ந்து கொண்டு விட்டால், பிறகு வாழ்க்கையின் எந்தப் பரிமாணத்திற்குள் அடியெடுத்து வைத்தாலும், அவர்களுடைய செயல்பாடுகள் சரியான கோணத்தில் இருக்கும். அதிகப் பேராசை அல்லது காமம் இவற்றால் பாதிக்கப்பட்டு செயல் செய்ய மாட்டார்கள். அவர்களுடைய செயல்களின் தன்மை முற்றிலும் வேறுவிதமாக இருக்கும்.

ஆண், பெண் என்ற இருமையில் சிக்கிக் கொள்ளாதிருக்கும்போது, தெய்வீகத்தை உணர்வது மிகவும் சுலபம். நீங்கள் ஆண், பெண் என்ற இருமையில் சிக்கிக் கொண்டுவிட்டால் பிறகு உங்கள் பால் அடையாளங்களை மறக்கடிக்க பல செயல்கள் செய்ய வேண்டியதிருக்கிறது. அப்படியும் அந்த உணர்வு உங்களுக்கு திரும்பத் திரும்ப வருகிறது.

எனவே, தன்னை உணர்வதற்கான பரிமாணத்தில், 11, 12 வயதிலேயே ஈடுபடுத்தப்படும்போது, மிகவும் குறைந்த எதிர்ப்புணர்வுடன் சுலபமாக அவர்களால் அதில் ஈடுபட முடிகிறது. அதன்பிறகு அவர்கள் தங்கள் வாழ்க்கையை முற்றிலும் வேறுவிதமான பரிமாணத்தில் நடத்திச் செல்ல முடியும், ஆனால் இப்போது அந்தச் செயல்முறை உயிருடன் இல்லை. வெறும் சடங்காக மாறிவிட்டது.