1,000 crore railway line between Walaja Road and Nagari started

சென்னை,-ஆந்திர மாநில அரசின் அழுத்தம் காரணமாக, 16 ஆண்டுகளாக முடங்கியுள்ள திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ரோடு - ஆந்திர மாநிலத்தின், சித்துார் மாவட்டம், நகரி இடையே, 1,000 கோடி ரூபாயிலான பணிகள் விரைவில் துவங்க உள்ளன. தமிழகத்தில் விழுப் புரம்,திருவண்ணாமலை, வேலுார், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரயில்பாதையை இணைக்கும் வகையில், திண்டிவனம் - நகரி புதிய ரயில்பாதை திட்டத்தை, 2006ம் ஆண்டில் ரயில்வே அறிவித்தது.விரைவில் 'டெண்டர்'

இதன்படி, 180 கி.மீ., துாரம் கொண்ட இந்த ரயில் பாதை திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை, தெள்ளாறு, வந்தவாசி, மாம்பாக்கம், எருமைவெட்டி, செய்யாறு, மாமண்டூர், ஆரணி, தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை. வாலாஜா சாலை சந்திப்பு, கொடைக்கல், சோளிங்கர்,ஆர்.கே.பேட்டை, பள்ளிப் பட்டு, பொதட்டூர்பேட்டை வழியாக, ஆந்திர மாநிலம், நகரிக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல், போதிய நிதி ஒதுக்காதது உள்ளிட்ட காரணங்களால், இந்த திட்டப் பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.இந்நிலையில், இந்த புதிய பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக, வாலாஜா ரோடு - நகரி இடையே நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து, விரைவில் 'டெண்டர்' வெளியிட்டு, பணிகளை மேற்கொள்ள தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை திட்டம் முக்கியமானது. அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆனாலும், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால், 20 சதவீத பணிகளே நடந்துள்ளன.

தொடர் அழுத்தம்
இந்த திட்டத்தின் அவசியத்தை உணர்ந்த ஆந்திர அரசு, பணிகளை வேகப்படுத்தும்படி, ரயில்வேக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன் பயனாக, தமிழகத்தில் 20 கி.மீ., - ஆந்திராவில் 50 கி.மீ., கொண்ட, வாலாஜா சாலை - நகரி இடையேயான 70 கிலோ மீட்டரில், முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பாதைக்கு மட்டும், 1,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிட்டுஉள்ளோம். நில உரிமையாளர்களுக்கு, 400 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. புதிய ரயில் பாதை அமைப்பதற்கான டெண்டர், விரைவில் வெளியிடப்படும். இந்த திட்டப் பணிகள் முடியும்போது, தெற்கு ரயில்வேயில் மற்றொரு முக்கியமான இணைப்பு ரயில் பாதையாக இருக்கும்.

அதாவது, தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து பயணியர், சரக்கு ரயில்கள் விழுப்புரத்தில் இருந்து அரக்கோணம் அல்லது சென்னைக்கு வராமல், நேரடியாக வாலாஜா சாலை - நகரி, ரேணிகுண்டா வழியாக செல்லலாம். குறிப்பாக, மும்பை, டில்லி விரைவு ரயில்களின் பயண நேரத்தை வெகுவாக குறைக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர். ஆந்திர மாநில அரசு காட்டும் ஆர்வத்தை, தமிழக அரசும் காட்டினால், தமிழகத்தில் மந்த கதியில் நடக்கும் ரயில்வே திட்டங்கள், புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள திட்டங்கள் விரைவில் நடைமுறைக்கு வரும்.'முழு திட்டத்திலும் கவனம் தேவை'

''திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை திட்டம், தமிழகத்தின் வட மாவட்டங்களை இணைக்கும் முக்கிய திட்டம். இது, வட மாவட்டங்களில் தொழிற்வளர்ச்சி, வேலை வாய்ப்புக்கு வழி வகுக்கும். எனவே, வாலாஜா சாலை - நகரிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல், அந்த ஒட்டுமொத்த திட்டத்துக்கும் முக்கியத்துவம் அளித்து, உரிய நிதி ஒதுக்கி, பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.- இளங்கோவன், உதவி தலைவர், தக் ஷின் ரயில்வே ஊழியர் சங்கம்