அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டையில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக, அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர், அரக்கோணம் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் மிதந்த கிடந்த சடலத்தை மீட்டனர். இதையடுத்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குருவராஜப்பேட்டையை சேர்ந்த மீனாட்சி (48) என்பது தெரியவந்தது இவர், துணி துவைப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய போது கால் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.