ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதியோர்களுக்கு - எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
National Helpline for Sr Citizen (Elder line-14567)

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். உறுதிமொழி ஏற்புக்கு பிறகு கலெக்டர் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு பேசினார். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம்,மத்திய அரசின் சமூகநீதி அமைச்சகம், தேசிய சமூக பாது காப்பு நிறுவனம் மற்றும் தமிழக அரசு இணைந்து முதியோர்களுக்கான இலவச தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளன. 14567 என்ற இந்த இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முதியோர் இல்லங்கள், பகல்நேர பராமரிப்பு மையங்கள், பராமரிப்பாளர்கள், முதியோருக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட விபரங்களை அறியலாம்.

மேலும், தனிப்பட்ட, குடும்பம் சார்ந்த பிரச்னைகள், தொல்லைகள் குறித்து தகவல் அளித்து நிவாரணம் பெறலாம். மன அழுத்தம், கோப மேலாண்மை, உறவு மேலாண்மை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மனநல ஆலோசனைகள் பெறலாம்.

மனநலம் பாதிக்கப் பட்ட, வழிதவறிய முதியோர் குறித்த விபரங்களை தெரிவிக்கவும் 14567 எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் வசந்திஆனந்தன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.