செம்பு பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி வைத்து குடித்தால் உடலுக்கு நல்லது என்று கண்டுபிடித்திருக்கிறார்களே இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல. முன்னோர்கள் காலத்திலிருந்தே மண் பானையும் செம்பும் தான் பிரதானமாக பயன்படுத்தப்பட்டது. அவற்றை ஏன் பயன்படுத்தினார்கள் என்று அக்குவேர் ஆணிவேராக இப்போதைய கண்டுபிடிப்புகள் புட்டு வைத்தாலும் இவற்றை முன்கூட்டியே கணித்து வைத்ததென்னவோ நமது முன்னோர்கள் தான்.


நீருக்கு நினைவாற்றல் இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதனால் தான் கோவிலில் கொடுக்கும் குறைந்த அளவான தீர்த்தமும் விலைமதிக்க முடியாத வையாக சொல்கிறார்கள். இந்த நீரை முறையாக நாம் உடலுக்கு எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமானதும் சீராகும் என்பது தான் இங்கு புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

மாசுபடிந்த காற்று போல் தண்ணீரும் மாசு கலந்து வருகிறது. வடிகட்டி கொடுக்கும் விலை மிக்க உபகரணங்கள் எல்லாம் நீரில் இருக்கும் சத்துக்களையும் சேர்த்து உறிஞ்சுவிடுகிறது. ஆனால் செம்பு அப்படி அல்ல. இரவு செம்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி மறுநாள் காலையில் அந்த தண்ணீரைக் குடிக்க வேண்டும். செம்பானது நீரில் இருக்கும் பாக்டீரியாக்களை முழுமையாக அழித்துவிடுகிறது. செம்பு நீர் நம் செரிமானத்தைத் தூண்டுகிறது. உடல் உறுப்புகளின் இயக்கங்களை சீராக்க செய்கிறது. உறுப்புகளை பாதுகாக்கிறது.

செம்பு நீரை குடித்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள் நாளடைவில் வெளியேற்றப்படுகிறது. மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது. செம்பில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் முதுமையைத் தடுத்து இளமையை தக்கவைக்க உதவுகிறது. நீரில் பரவக்கூடிய மலேரியா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க செம்பு நீர் உதவுகிறது. ஏனெனில் உலோகங்கள் எல்லாமே நோய்க்கிருமிகளை அழிக்கும் தன்மையை கொண்டிருக்கும். குறிப்பாக செம்பு மற்றும் பித்தளைக்கு இந்த ஆற்றல் அதிகமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்த சோகை குறைபாடைக் கொண்டிருப்பவர்கள் செம்பில் நீர் ஊற்றி வைத்து குடிக்கலாம். இந்த நீர் அறையின் வெப்பநிலையிலேயே 4 மணி நேரத்தில் பாக்டீரியாக்களை அழிப்பதால் இந்நீரைக் குடித்த 45 நிமிடங்களில் நம் உடலிலிருக்கும் செல்களுக்கு போய் சேருகிறது.

பெண்கள் செம்பு கலந்த நீரை குடித்து வந்தால் கருப்பைக்கு நல்லது என்கிறார்கள் முன்னோர்கள். இவை மட்டுமல்ல புற்று நோய், தைராய்டு, மூட்டுவலி, இரத்த சிவப்பணுக்கள் குறைபாடு, கீல்வாதம், செரிமான கோளாறுகள், மந்தமான சோர்வு, தேவையற்ற கொழுப்பு, வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலம் இவை அனைத்தையும் போக்கி முழுமையான உடல் ஆரோக்கியத்தை தருகிறது. இதை நுண்ணுயிர் ஆய்வாளர்களும் நிரூபித்திருக்கிறார்கள்.

உடனடியாக செம்பு நீருக்கு மாறுவது நல்லது. அதே நேரம் தரமான செம்பு பாத்திரத்தில் தான் இத்தகைய நன்மையையும் பெறமுடியும். இதை சுத்தப்படுத்துவதும் எளிதானதுதான். பாத்திரம் தேய்க்கும் சோப்புகட்டிகளைப் பயன்படுத்தாமல் புளி, எலுமிச்சை, தயிர் போன்றவற்றால் நன்றாக தேய்த்து சுத்தம் செய்தாலே செம்பு பாத்திரமும் பளிச்சென்று மின்னும். அதைக் குடித்து வளரும் நம் உடலும் பளிச்சென்று ஆரோக்கியத்திலும் அழகிலும் மின்னும்.