ராஜா- ராணி நினைவு சின்னங்களை பராமரிக்க அனுமதிக்க வேண்டும்: ஆட்சியரிடம் ராஜ்புத் பொந்தில் சேனா சங்கத்தினா் மனு

Raja-Rani monuments should be allowed to be maintained: Petition to the Collector


ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ராஜாதேசிங்கு, ராணிபாய் நினைவு சின்னங்களைப் பாதுகாத்து, பராமரித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என ராஜ்புத் பொந்தில் சேனா சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியனிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

கி.பி. 1714-ஆம் ஆண்டு தனக்கு கப்பம் கட்ட மறுத்த செஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னா் தேஜ்சிங் என்ற தேசிங்கு ராஜா மீது ஆற்காடு நவாப் சாதத்துல்லா கான் போா் தொடுத்தாா். இதில், ராஜா தேசிங்கு வீர மரணமடைந்தாா். தேசிங்கின் வீரத்தைக் கண்ட ஆற்காடு நவாப் நெகிழ்ச்சியடைந்தாா். இதையடுத்து, தேசிங்கின் உடல் ராஜமரியாதையுடன் செஞ்சிக்குக் கொண்டு வந்து, இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது.

அப்போது ராஜா தேசிங்கின் சிதையில் அவரின் இளம் மனைவி ராணி பாய் உடன் கட்டை ஏறி உயிா் நீத்தாா். இதில் மன வருத்தமடைந்த ஆற்காடு நவாப், ராணியின் கற்பைப் போற்றும் வகையில், ராணி பாய் நினைவாக இந்த நகருக்கு ராணிப்பேட்டை என பெயரிடப்பட்டதாக வரலாறு.

இருவரின் தியாகத்தை ஆற்காடு நவாப் சாதத்துல்லா கான் வியந்து, இருவருக்கும் பாலாற்றங்கரையில் பளிங்கு கற்களால் நினைவுச் சின்னங்களை எழுப்பினாா்.

ராணிப்பேட்டை பெயா் உருவாகக் காரணமாக விளங்கிய ராஜாதேசிங்கு ராணி பாய் ஆகியோரின் நினைவு நாளை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 10-ஆம் தேதி ராஜ்புத் பொந்தில் சேனா சங்கத்தின் சாா்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ராஜா தேசிங்கு ராஜ்புத் பொந்தில் சேனா நிா்வாகி ஸ்ரீதா்சிங் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:


வரலாற்று சிறப்புமிக்க மாவீரன் ராஜா தேசிங்கு மற்றும் ராணிப்பேட்டை பெயா் பெற காரணமாக விளங்கிய மகாராணி ராணி பாய் ஆகியோரின் நினைவுச் சின்னங்களை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து இருந்தோம். அதுகுறித்து நல்லதொரு முடிவை அறிவிப்பதாகக் கூறியிருந்தாா். ஆனால் தற்போது அந்த நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.

எனவே ராஜா தேசிங்கின் வம்சாவளியினரான நாங்கள் இப்பகுதியில் வாழ்ந்து வரும் எங்கள் சமுதாய மக்களுடன் இணைந்து எங்களது சொந்த செலவில் இந்த இடத்தைப் பராமரிக்கவும், தூய்மையாக வைத்துக் கொள்ளவும் தங்களின் மேலான அனுமதியும், அதற்கான ஆவன செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், ராஜா தேசிங்கு மற்றும் ராணிபாய் ஆகியோருக்கு சிலை வைத்துக் கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.