PM-KUSUM (Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan)

தமிழகத்தில் முதன்முறையாக, பிரதமரின் சூரியசக்தி மின் திட்டத்தின் கீழ், 3 மெகா வாட் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல் கடிதத்தை, இரு விவசாயிகளுக்கு, தமிழக மின் வாரியம் வழங்கியுள்ளது. விவசாயிகளுக்கு மின்சாரம் வாயிலாகவும் வருவாய் கிடைக்க, 'பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக் ஷா' எனப்படும், பிரதமர் உழவர் சக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாடு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

அத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்களின் நிலத்தில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கலாம். உற்பத்தியாகும் மின்சாரத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தியது போக, மின் வாரியத்திற்கு விற்கலாம்.இதனால், மழை இல்லாமல் விவசாயம் பாதித்தாலும், மின்சார விற்பனை வாயிலாக வருவாய் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில், 500 மெகா வாட் சூரியசக்தி மின்சாரத்தை, 1 யூனிட் அதிகபட்சம், 3 ரூபாய்க்கு வாங்க, மின் வாரியம் சில மாதங்களுக்கு முன், 'டெண்டர்' கோரியிருந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, 1 மெகா வாட்; ராணிப்பேட்டை, ஆற்காட்டைச் சேர்ந்த ஒரு விவசாயி, 2 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, யூனிட், 2.99 ரூபாய்க்கு மின்சாரம் வழங்க விருப்பம் தெரிவித்தனர். இருவரிடமும் அந்த விலைக்கு, 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய, மின் வாரியத்திற்கு, ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, தமிழகத்தில் முதன்முறையாக, பிரதமரின் சூரியசக்தி மின் திட்டத்தின் கீழ், இரண்டு விவசாயிகளிடம் இருந்து, 3 மெகா வாட் சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல் கடிதத்தை மின் வாரியம் வழங்கியுள்ளது.