பிளஸ் 2 பொதுத்தேர்வு வியாழக்கிழமை முதல் தொடங்கவுள்ள நிலையில் தேர்வர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 

இது குறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 

பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கத்திரி வெயிலை கருத்தில் கொண்டு மாணவர்கள் தேர்வெழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை. எனினும் விருப்பம் உள்ள மாணவர்கள் அணிந்து கொள்ளலாம். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் புதன்கிழமை ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.