Techniques to follow to get extra yield in groundnut cultivation !!

சிவகங்கை மாவட்டம் கல்லல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சு.அழகுராஜா, நிலக்கடலைச் சாகுபடியின் போது கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து கூறியதாவது:

நிலக்கடலையில் விதைநேர்த்தி


நிலக்கடலையில் விதை மூலமும் மண் மூலமும் பரவும் நோய்களான வேரழுகல் மற்றும் இலைப்புள்ளிநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த விதைநேர்த்தி செய்யவேண்டும் எனவும்,

ஒரு லிட்டர் ஆறிய அரிசி வடிகஞ்சியில் ரைசோபியம் (நிலக்கடலை) மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரத்தை 200 கிராம் அளவில் எடுத்துக் கொண்டு ஒரு குச்சியை கொண்டு நன்கு கலக்கி விதைகளை சாக்குபையின் மேல் பரப்பவும்.

தயார் செய்யப்பட்ட நுண்ணுயிர் உரத்தை விதைகளின் மேல் நன்கு படும்படி செய்த பின் நிழலில் இரண்டு மணி நேரம் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும்.

உயிரியல் மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்யும் விதைகளை இரசாயனப் பூச்சிக் கொள்ளி கொண்டு விதை நேர்த்தி செய்யக்கூடாது.

விதை நேர்த்தி செய்யும் போது விதையின் மேல் தோல் உரியாமல் விதை நேர்த்தி செய்ய வேண்டும், விதையுரையில் பாதிப்பு ஏற்படின் முளைப்புத்திறன் குறையும்.

விதைப்புக் கருவி கொண்டு விதைப்பு


சீரான இடைவெளியில் விதைக்க விதைப்புக் கருவி கொண்டு விதைக்க வேண்டும் எனவும் விதைகளை வரிசைக்கு வரிசை 30 செ.மீ செடிக்கு செடி 10செ.மீ இடைவெளியில் 4 செ.மீ ஆளத்திற்கு மிகாமல் விதைக்க வேண்டும்.

கூடுதல் மகசூல் பெற தொழு உரம்


நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற வளமான மண் மற்றும் ஊட்டச்சத்து அவசியமாகிறது. ஆதலால் மக்கிய தொழு உரம் அல்லது தென்னை நார் கழிவு உரத்தினை ஒரு ஏக்கருக்கு 5 டன் என்ற வீதத்தில் இட்டு நன்கு உழவு செய்ய வேண்டும்.

மண் அணைத்து ஜிப்சம் இடுதல்


எண்ணெய் சத்துமிக்க நிலக்கடலையினை பெறுவதற்கு 45வது நாள் களைக்கொத்தி ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டுமண் அணைக்க வேண்டும். இதனால் விழுதுகள் மண்ணுக்குள் இறங்கி நிலக்கடலை மகசூல் அதிகரிக்கும். காலியாக உள்ள கொள்கலனை உருட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் மகசூலை அதிகரிக்கலாம்

ஊட்டச்சத்து கலவை தெளிப்பு


பெரிய பருப்புகள் கொண்ட இரகங்களில் காய்களின் பருப்பின் வளர்ச்சி குறைபாடு என்பது ஒரு பெரிய இடர்பாடு ஆகும். இதைத் தவிர்த்து நல்ல வளர்ச்சியடைந்த முழுமையான பருப்புகளைப் பெறுவதற்கு பல ஊட்டச்சத்துக்களை கலந்து தெளிக்க வேண்டும்.

இந்தக் கலவையை தயாரிக்க டி.ஏ.பி 2.5 கிலோ, அம்மோனியம் சல்பேட் 1 கிலோ மற்றும் போராக்ஸ் (வெண்சுரம்) 0.5 கிலோவினை 37 லிட்டர் தண்ணீரில் ஒன்றாக கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும்.

மறுநாள் காலை இந்தக் கலவையை வடிகட்டினால் 32 லிட்டர் வரை தெளிந்த ஊட்டச்சத்து நீர் கிடைக்கும். இதனை 468 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து 500 லிட்டர் அளவில் தயார் செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால் பிளானோபிக்ஸ் மருந்து 350 மில்லியை இதில் சேர்த்து விதைத்த 25ம் மற்றும் 35ம் நாட்களில் தெளிக்க வேண்டும் என கூறினார்.