Today the sun shines on the lingam at the Rajaraja Chola Grandfather Temple near Melpadi


மேல்பாடி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் உள்ள அரிஞ்சிகை ஈஸ்வரர் சந்நிதியில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு இன்று முதல் 9 நாட்களுக்கு நடக்கிறது.

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் ஆந்திர மாநில எல்லையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டை நாட்டின் வட பகுதியான வள்ளிமலை உள்ளது. இதன் அருகில் நீவா நதி என்ற பொன்னை ஆற்றின் மேற்கு கரையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பராந்தகசோழ மன்னரால் கட்டப்பட்டு ராஜராஜ சோழ மன்னரால் குடமுழுக்கு செய்யப்பட்ட சிறப்புக்குரிய மேல்பாடி தபஸ்கிருதாம்பாள் சமேத சோமநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் தென்திசையில் சுமார் 200 அடி தொலைவில் ராஜராஜ சோழனின் பாட்டனார் ஆரூர் துஞ்சியதேவன் கல்லறை உள்ளது. 

இவர் கி.பி.1014-இல் நடந்த போரில் வீரமரணம் அடைந்தார். அவரது நினைவாக கருங்கல்லால் ஆன அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கோயில் கட்டப்பட்டது. அங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அரிஞ்சிகை ஈஸ்வரர் கோயிலாகி சிறப்பான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவ லிங்கத்தின் மீது ஆண்டு தோறும் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெறும். காலை 6 முதல் 6.30 மணி வரை ஏற்படும் இந்த நிகழ்வை காண மேல்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் வந்து செல்வர்.