கலவை அருகே தனியார் பஸ் டிரைவர் ரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த நாகலேரி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 46). தனியார் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி. தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார்.

நேற்று முன்தினம் வெங்கடேசனின் தந்தைக்கு நினைவஞ்சலிக்கு தேவையான பூஜைப் பொருட்களை வாங்கி வருமாறு தாயார் கூறியுள்ளார். இதற்கு வெங்கடேசன் தனக்கு சோர்வாகவும், மயக்கமாகவும் உள்ளது என கோபத்துடன் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை.

வேலைக்கு சென்று விட்டு வந்த வெங்கடேசனின் மனைவி மகேஸ்வரி தனது கணவர் எங்கே என்று கேட்டதற்கு அவர் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதாக வீட்டில் இருந்தவர்கள் கூறியுள்ளார்கள். பின்னர் வெங்கடேசனின் போனுக்கு அவருடைய தாயார் தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை.

நீண்டநேரமாகியும் வெங்கடேசன் வராததால் அவரது மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்கள் இரவு முழுதும் தேடியுள்ளனர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் விஜயராகவலு என்பவருக்கு சொந்தமான பாழடைந்த வீட்டில் வெங்கடேசன் கை, கால்களில் ரத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து கலவை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கலவை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்- இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

வெங்கடேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.