ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3-ந்் தேதி ஒரு சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கி கவுரவிக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், 2021-ம் ஆண்டுக்கான இவ்விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் அடங்கும்.

விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிபவராகவும் இருக்க வேண்டும். பத்திரிகை பணியை முழுநேரப் பணியாக கொண்டிருக்க வேண்டும். இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றியிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் எழுத்து பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ, பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மேற்கண்ட தகுதிகளை கொண்ட ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விரிவான விவரங்கள் மற்றும் அவற்றுக்கு உரிய ஆவணங்களுடன் இயக்குனர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமை செயலகம், சென்னை என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.