சித்திரை பௌர்ணமி சிறப்பு Special | Chithirai Pournami

சித்திரை மாதம் பௌர்ணமி திதியில்; சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேட இராசியில் (சித்திரைமாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது

Chithirai Pournami 2022 Specials, Worship Method

இத் திதியும், நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால்; இத் தினம் அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதிர் தர்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும் அமைகின்றது.

வழிபடும் முறை

சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறை வழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன. அம்மனுக்குச் சிறப்புப் பொருத்திய இச்சித்திரா பௌர்ணமி விரத நாளிலேயே எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமைகின்றது.

பூமா தேவியாக, பொறுமையின் இருப்பிடமாக வீற்றிருக்கும் அன்னை பொறுமை இழந்தால் எரிமலையாகக் கிளர்ந்தெழவும், புயலாக, வெள்ளமாக, வரட்சியாக, ஆழிப்பேரலையாக, அதிர்வாக, கொடுநோய்களாக வெளிப்பட்டு தன் சக்தியைக் காட்டி உலகத்தோருக்குப் புத்தியைப் புகட்டும் ஆற்றல் மிக்கவள். 

அம்மன் வழிபாடு

தாயாக இருந்து வாழ்வளிக்கும் அம்மனை இந் நன்நாளில் நம்பிக்கையுடன் தொழுது நின்றால் நிச்சயம் வாழ்வில் மலர்ச்சியும், எழுச்சியும் நம்மை நாடி வரும். துன்ப, துயரங்கள் தூர விலகி விடும். மங்களம் பொங்கும். நல்வாழ்வு கிட்டும் என புராணங்கள் கூறுகின்றன.

சித்ரா பௌர்ணமி அன்று தானம் செய்வது நல்லது


அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது. வெய்யிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது வழக்கம்.

உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.