ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை,வாலாஜாப் பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 6 நகராட்சிகளுக்கும் தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப் பாக்கம், அம்மூர்,கலவை, திமிரி,விளாப்பாக்கம் ஆகிய 8 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது.

வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் இன்று அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் பதிவு ஏற்பு விழா நடைபெற்றது.

அரக்கோணம் நகராட்சியில் 36 கவுன்சிலர்கள், சோளிங்கர் நகராட்சியில் 27 கவுன்சிலர்கள், வாலாஜாப்பேட்டை நகராட்சியில் 24 கவுன்சிலர்கள், ராணிப் பேட்டை நகராட்சியில் 30 கவுன்சிலர்கள், ஆற்காடு நகராட்சியில் 30 கவுன்சிலர்கள், மேல்விஷாரம் நகராட்சியில் 21 கவுன்சிலர்கள் என மொத்தம் 168 கவுன்சிலர்கள் பதவியேற்றனர். 8 பேரூராட்சிகளில் 120 கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை நகராட்சியில் 30 வார்டுகளுகளில் வெற்றி பெற்ற திமுக 23, அதிமுக 4, விடுதலை சிறுத்தை 2, சுயேட்சை 1 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா இன்று ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

மேடையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ படம் வைக்கப்பட்டிருந்ததால் அதிமுக கவுன்சிலர்கள் 4 பேரும் நாங்கள் மேடையில் ஏறமாட்டோம் கீழேயே பதவியேற்றுக் கொள்கிறோம் என்றனர். அதற்கு அனுமதி அளிக்காததால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பதவியேற்காமல் புறக்கணித்து சென்றனர்.

பின்னர் நகராட்சி ஆணையர் அறைக்கு சென்று பதவியேற்று கொண்டனர்.