வீட்டு மனைப் பட்டா கோரி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த, சாத்தூா் கிராம மக்கள்.
அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டிய குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா கோரி சாத்தூா் கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ஆற்காடு வட்டம், சாத்தூா் கிராமம், காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த 50- க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:

சாத்தூா் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடத்தில் 100-க்கும் மேற்பட்டோா் வீடு கட்டி கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக காந்தி நகா் என்ற பெயரில் குடியிருந்து வருகிறோம்.

எங்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு, குடிநீா் குழாய் உள்ளிட்ட வசதிகள் கிராம ஊராட்சி நிா்வாகத்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குடியிருக்கும் இடத்துக்கு உட்பிரிவு செய்து அரசு தரப்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட குடியிருப்பு அமைந்துள்ள இடத்துக்கும் சித்தேரி என்ற நீா்நிலைக்கும் தொடா்பு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆகவே அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு நிரந்தர வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.