சென்னை : புறநகர் மின்சார ரயில் வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை சாலை நிலையங்களில் பாதை மாற்றி இயக்கப்பட்டதால் பயணியர் அவதிக்குள்ளாகினர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் நிலையத்திற்கு, தினமும் காலை 6:40 மணிக்கு விரைவு புறநகர் மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், திருவள்ளூரில் இருந்து வில்லிவாக்கம் வரை எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்படும். மேலும், திருவள்ளூர் - வில்லிவாக்கம் இடையே உள்ள செவ்வாப்பேட்டை சாலை மற்றும், வேப்பம்பட்டு நிலையங்களில் நின்று செல்லும்.நேற்று காலை இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில், திருவள்ளூர் - வில்லிவாக்கம் இடையே, எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்படாமல், புறநகர் மின்சார ரயில் பாதையில் மாற்றி இயக்கப்பட்டது.ரயில் பாதை மாற்றம் குறித்து வழியில் உள்ள செவ்வாப்பேட்டை சாலை, வேப்பம்பட்டு நிலையத்திற்கு எந்த அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை.

இதனால், இந்நிலையங்களில் எக்ஸ்பிரஸ் நடைமேடையில் பயணியர் காத்திருந்தனர். ரயில் நிலையத்தை நெருங்கிய போதுதான், பாதை மாற்றி இயக்கப்படுவது பயணியருக்கு தெரியவந்தது. புறநகர் நடைமேடையில் வந்ததால், எக்ஸ்பிரஸ் நடைமேடையில் இருந்து, புறநகர் மின்சார ரயில் நடை மேடைக்கு அவசர, அவசரமாக ஓடிவந்து, ரயிலில் ஏறி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பல பயணியர் ஓடிவந்தும், ரயிலில் ஏற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. ரயில் இயக்கத்தில் திடீரென மாற்றம் செய்யும் போது, வழியில் உள்ள நிலையங்களில் காத்திருப்பவர்களுக்கு மாற்று பாதை குறித்து, முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் உதவியாக இருக்கும். பயணியர் அவசர அவசரமாக பதட்டத்துடன், பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படாது.