இந்த வகை கொடிகளுக்கு தடை.. குடியரசு தினவிழாவில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!
இன்று நாடு முழுவதும் 73வது குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றுகிறார். கொரோனா பரவல் காரணமாக கட்டுபாடுகளுடன் எளிய முறையில் குடியரசு தின விழாவை கொண்டாட பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஏற்கனவே தேசியக் கொடிகள் பயன்படுத்தும் விதிமுறைகள் குறித்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.  அதில், "பொது மக்களின் நம்பிக்கையையும் விருப்பத்தையும் தேசியக்கொடி பிரதிபலிக்கிறது. அந்தக் கொடிக்கு தகுந்த மரியாதை அளிக்கப்பட வேண்டும். 

நமது நாட்டின் கொடிக்கு உலகளாவிய ஈர்ப்பும் மரியாதையும் விசுவாசமும் உள்ளது. ஆனாலும் தேசியக் கொடிகளின் விதிமுறைகள், நடைமுறை, மரபு குறித்து பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அமைப்புகளிடம் கூட போதிய விழிப்புணர்வை காண முடிவதில்லை. 
தேசியக்கொடிக்கான விதிமுறைப்படி முக்கியமான தேசிய, கலாசார, விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது காகிதத்தால் செய்யப்பட்ட தேசியக் கொடியை பொதுமக்கள் பயன்படுத்தலாம். 

அந்த வகையில் குடியரசு தினத்தன்று பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது.  மேலும் நிகழ்ச்சி முடிந்ததும் தேசியக் கொடிகளை யாரும் தரையில் வீசி செல்லாத நிலையையும் உறுதிப்படுத்தி அவற்றை தனிப்பட்ட முறையில் அதற்கே உரிய கண்ணியத்துடன் அகற்ற வேண்டும். 

தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம்-1971, 2021ல் திருத்தப்பட்ட இந்திய தேசியக்கொடி விதிமுறைகள்-2002 ஆகியவற்றின் நகல்கள் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் காணக் கிடைக்கின்றன" என தெரிவிக்கப்பட்டது. ஆகவே பொதுமக்கள் 73வது குடியரசு தினவிழாவை ஒன்றிய அரசு அறிவுறுத்தலின்படி கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.