Why is the gates of heaven opened on Vaikunda Ekadasi ?
சொர்க்கம் என்பது புண்ணியம் செய்தவர்களுக்கு கிடைக்குமிடம்.

மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. 

விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, அவருடைய இருகாதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்கமுடியாமல் தேவர்கள் திணறினர். அதனால் விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணு பகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

இறுதியில் எம்பெருமானுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மது, கைடபர் என்ற அரக்க சகோதரர்களை, பெருமாள் வைகுண்டத்தின் கதவை திறந்து தன் உலகிற்கு அவர்களை அழைத்துக் கொண்டார். 

அதை அனுபவித்த அரக்கர்கள் தங்களுக்கு கிடைத்த பேறு உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி ஆண்டவனிடம் “வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களும், அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.

அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் (மோட்சவாசல்) திறக்கப்பட்டு, சாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது. அந்த வாசல் வழியே வந்து பெருமாளை வணங்குவது சிறப்பு ஆகும்.