வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற கட்டிட தொழிலாளி மாயமானார். இதுதொடர்பாக 2 மாதங்களுக்கு பின்னர் புகார் அளிக்கப்பட்டது.
ஆற்காடு அருகே உள்ள தென்நந்தியாலம் மலைமேடு பகுதியை சேர்ந்தவர் சின்ன ராஜ்(51). இவரும் அதே ஊரை சேர்ந்த சிலர் அங்குள்ள ஒரு கட்டிட ஒப் பந்ததாரரிடம் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வெளியூரில் வேலைக்கு சென்றால் 2 மாதங்களுக்கு ஒருமுறை வீடு திரும்புவார்களாம்.

அதேபோல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பியிருந்த சின்ன ராஜ், அதன் பின்னர் தின சரி மது குடித்து விட்டு வீட்டில் இருந்தாராம். அதே ஊரை சேர்ந்தவர்கள் விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு சென்ற நிலையில் சின்னராஜ் செல்லவில்லையாம். இதனால் அவரது குடும்பத்தினர் அவரிடம் பேசாமல் இருந்தனர். இதையடுத்து சில தினங்கள் கழித்து வேலைக்கு செல்வதாக கூறி சின்னராஜ் வீட்டில் இருந்து சென்றார்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் முந்தைய தினம், அதே ஊரை சேர்ந்த அனைத்து தொழிலாளர்களும் வீடு திரும்பினர். ஆனால் சின்னராஜ் மட்டும் திரும்ப வில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கட்டிட ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, சின்னராஜ் 2 மாதங்களாக வேலைக்கு வரவில்லை என தெரிவித்தார்.அவரை பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை.

இதுகுறித்து அவரது மனைவி தனலட்சுமி நேற்று முன்தினம் ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ பசலைராஜ் நேற்று வழக்குப்பதிந்து மாய மான சின்னராஜை தேடி வருகிறார்.