ராணிப்பேட்டை: நெமிலி அருகே, தரைப்பாலம் மூழ்கியதால், 10 கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
கர்நாடகா, ஆந்திராவில் பெய்யும் மழையால் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே திருமால்பூர் ஏரிக்கு நேற்று காலை, 6:00 மணிக்கு அதிகளவு தண்ணீர் வந்ததால், திருமால்பூர்- கோவிந்தவாடிக்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியது.
கோவிந்தவாடி, அகரம், புதுப்பேட்டை, கீழ்பாக்கம் உள்ளிட்ட, 10 கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். இவர்கள் காவேரிப்பாக்கம் வழியாக, 80 கி.மீ., தூரம் நடத்தும், பைக்கிலும் சுற்றிக் கொண்டு திருமால்பூர் செல்கின்றனர்.
மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சம்பவ இடம் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
தொடர் மழை, பாலாறு, பொன்னை ஆறுகளில் அதிக நீர்வரத்தால், காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு, 490 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், மாவட்டத்திலுள்ள, 379 ஏரிகளில், 81 முழுமையாகவும், 28 ஏரிகள், 75 சதவீதம், 44 ஏரிகள், 50 சதவீதம், 72 ஏரிகள், 25 சதவீதமும் நிரம்பியுள்ளன.
வாலாஜா பாலாறு அணைக்கட்டுக்கு வினாடிக்கு, 6,500 கன அடி நீர்வரத்து உள்ளது. இது அருகிலுள்ள மகேந்திரவாடி, கோவிந்தவாடி ஏரிகளுக்கு திருப்பப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.