வாலாஜா பாலாறு அணைக்கட்டில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கேட்பாரற்று கிடந்த பேண்டு, சட்டை


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பாலாறு அணைக்கட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுமக்கள் பலர், அங்கு வந்து வேடிக்கைப் பார்க்கிறார்கள். ஒருசிலர் அணைக்கட்டு ஓரம் குளித்து மகிழ்கிறார்கள்.

பாலாறு அணைக்கட்டு கரையோரம் பல இளைஞர்கள் குளித்த இடத்தில் ஒரு பேண்டு, சட்டை வெகுநேரமாக கேட்பாரற்றுக் கிடந்தது.

அதை, யாரும் எடுத்துச் செல்லவில்லை. அந்தப் பேண்டு, சட்டைைய கண்ட அங்கிருந்த ஒருவர், அதை எடுத்துப் பார்த்தார்.

அதில் ஒரு கல்லூரி மாணவரின் அடையாள அட்டை, அதனுடன் ஒரு செல்போன் இருந்தது. அடையாள அட்டையில் ஹரிஹரன் (வயது 21) மற்றும் கல்லூரி முகவரி குறிப்பிடப்பட்டு இருந்தது.

செல்போன் மூலம் தகவல்


மாணவரின் செல்போன் மூலமாக, அவரின் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு பேசிய அவர், பாலாறு கரையோரம் வெகுநேரமாக ஹரிஹரனின் பேண்டு, சட்டை கிடக்கிறது. ஆனால் அவரை அங்குக் காணவில்லை. அதில் கல்லூரி அடையாள அட்டை, செல்போன் ஆகியவைகள் இருந்ததாகத் தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த ஹரிஹரனின் தந்தை சேட்டு, இதுபற்றி வாலாஜா போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டு பாலாறு அணைக்கட்டுக்கு விரைந்து வந்தார்.

தகவல் அறிந்ததும் போலீசாரும், சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், தகவல் கொடுத்தவரிடம் விசாரித்தனர்.

பாலாற்றில் குளித்தார்


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அள்ளிகுளம் கிராமம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த சேட்டுவின் மகன் ஹரிஹரன் என்றும், அவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார் என்றும் தெரிய வந்தது.

ஹரிஹரன் நேற்று மதியம் 12 மணியளவில் பாலாறு அணைக்கட்டில் ஓடும் வெள்ளப் பெருக்கை ேவடிக்கை பார்க்க வந்தார்.

சிறிது நேரம் வேடிக்கை பார்த்த அவர், தான் அணிந்திருந்த பேண்டு, சட்டையை கரையில் கழட்டி வைத்து விட்டு பாலாற்றில் கரையோரம் ஆழம் குறைவானப் பகுதியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்ததும், அப்போது அருகிலேயே இருந்த சூழல் நீரில் சிக்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதும் தெரிய வந்தது.

நீரில் அடித்துச் செல்லப்பட்டு சாவு


தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் பாலாறு தண்ணீரில் இறங்கி ஹரிஹரனை தேடும் பணியில் ஈடுபட்டனர். பாலாற்றில் சிறிது தூரத்தில் ஹரிஹரன் பிணமாகக் கிடந்ததை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.