ஆற்காட்டில் மொபைல் வாகனங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து 45 மொபைல் வாகனங்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தும்பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல் ஆற்காடு வட்டாரத்தில் 5 மொபைல் வாகனங்கள் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆற்காடு பெரிய அசேன்புரா பகுதியில் மொபைல் வாகனம் மூலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேஷ் பாபுராஜ் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் சத்யநாராயணன், ரவிக்குமார், ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை மேற்கொண்டு தடுப்பூசி செலுத்தினர்.

இதனை கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். அதேபோல் ஆற்காடு தாலுகா, புதுப்பாடி உள்வட்டம் கரிக்கந்தாங்கலில் மொபைல் வாகனம் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் வினோத் மற்றும் வருவாய் துறையினர், சுகாதாரத் துறையினர் உடனிருந்தனர்.