வேலூர் சலவன்பேட்டை திரு. வி. க. சாலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி குயிலா.

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அக்டோபர் 15 ஆம் தேதி மாலை பழைய பஸ் நிலையம் செல்வதற்காக அண்ணா சாலையில் உள்ள ராஜா தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறினார்.

அண்ணா கலையரங்கம் அருகே ஆட்டோ வந்தபோது அதில் 4 பெண்கள் ஏறினர். ஆட்டோ பழைய பேருந்து நிலையத்தில் வருவதற்குள் 4 பெண்களும் குயிலாவுடன் நைசாக பேச்சுக் கொடுத்தபடியே அவரது பையிலிருந்த ரூ. 3 ஆயிரத்தை திருடினர்.
பழைய பஸ் நிலையத்திற்கு வந்ததும் ஆட்டோ டிரைவருக்கு பணம் கொடுப்பதற்காக குயிலா பையை திறந்தார். அதில் இருந்த பணத்தை காணவில்லை.

இதனால் திடுக்கிட்ட அவர் தன்னுடன் வந்த பெண்கள் தான் திருடிவிட்டார்கள் என கத்தி கூச்சலிட்டார்.

சுதாரித்துக் கொண்ட ஆட்டோ டிரைவர் மற்றும் பொதுமக்கள் ஆட்டோவில் வந்த பெண்கள் 4 பேரையும் பிடித்து வேலூர் வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் சேலம் ஹோலி கிராஸ் தெருவைச் சேர்ந்த காயத்ரி (39), கீதா (28), லதா (29), சந்தியா (30), என்பதும் அவர்கள் பணத்தை திருடியதும் தெரியவந்தது.

சேலத்தை சேர்ந்த இவர்கள் 4 பேரும் அடிக்கடி வேலூருக்கு வந்து சென்றுள்ளனர். ஆட்டோ மற்றும் பஸ்சில் வரும் பெண் பயணிகளிடம் திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
சாலைகளை கடக்கும் வயதானவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து பணம் திருடியதும் தெரியவந்தது. சப்- இன்ஸ்பெக்டர் பால வெங்கடராமன் காயத்திரி உள்ளிட்ட 4 பெண்களையும் கைது செய்து அக்டோபர் 16 ஆம் தேதி வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைத்தார்.


மேலும், ஆட்டோ, பஸ்சில் செல்லும் போது சாலைகளில் கடந்து செல்லும் பெண்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்