பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய உள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி செங்கோட்டையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுச் சோதனை திட்டமாக 6 யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நாடு முழுவதும் அமலாக்கம் செய்து உள்ளார்.

தேசிய சுகாதார ஆணையம் (NHA) அறிமுகம் செய்த ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் 3 ஆண்டுகள் முடிந்த அதே நாளில் மோடி பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தையும் அறிமுகம் செய்ய உள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
சரி பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டம் என்பது என்ன.. இத்திட்டம் மூலம் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது.. என்பதை இப்போது பார்ப்போம்.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்


ஜன் தான், ஆதார் மற்றும் மொபைல் ஆகிய மூன்று டிஜிட்டல் தளத்தை அடிப்படையாகக் கொண்டு கூடுதலான சில டிஜிட்டல் சேவைகளுடன் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன். மக்களின் சுகாதாரம் சார்ந்த பல தரப்பட்ட தரவுகள், தகவல்கள் சேகரிப்பு, இன்பராஸ்டரக்சர் சேவைகள், திறம்பட மேம்படுத்துதல், பல தளத்துடன் இணைத்து இயங்கக்கூடிய தளத்தை உருவாக்குவதும் அதேவேளையில் பாதுகாப்பு, இரகசியத்தன்மை, தனியுரிமை உடன் தரவுகளை நிர்வாகம் செய்யப்படும் திட்டம் தான் இந்த ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்.

சுகாதாரத் தரவுகள்

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் மூலம் மக்களின் சுகாதாரத் தரவுகளை அவர்களின் அனுமதி உடன் பயன்படுத்துவது மட்டும் அல்லாமல் இத்துறை அமைப்புகள் மத்தியில் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பது முக்கிய இலக்காக உள்ளது.

ஹெல்த் ஐடி

பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் மூலம் ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஒரு ஹெல்த் ஐடி உருவாக்கப்படும். இந்த ஹெல்த் ஐடி ஒரு ஹெல்த் அக்கவுன்ட் ஆக இயங்கும், இந்தக் கணக்கில் ஒருவரின் உடல்நலம் குறித்த தரவுகள் (ஹெல்த் ரெக்கார்டு) சேமிக்கப்படும். மேலும் சேமிக்கப்படும் தரவுகளை மொபைல் செயலி வாயிலாகச் செக் செய்துகொள்ள முடியும்.

தகவல் களஞ்சியம்

மேலும் இந்தத் தரவுகளை மருத்து சேவை அளிக்கும் நிறுவனங்கள் Healthcare Professionals Registry (HPR) மற்றும் Healthcare Facilities Registries (HFR) களஞ்சியம் வாயிலாகப் பயன்படுத்த முடியும்.

ஓரே தளம்

இந்தக் கட்டமைப்பு மூலம் அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள், மருத்துவச் சேவை அளிக்கும் அமைப்புகளும் இணைந்து எளிதாக வர்த்தகம் செய்வது மட்டும் அல்லாமல் கண்காணிப்பில் வைக்க முடியும் எனத் தெரிகிறது.

தொழில்நுட்ப பிரேம்வொர்க்


இத்திட்டத்தின் கீழ் PM-DHM Sandbox உருவாக்கப்பட உள்ளது, இது தான் இத்திட்டத்தின் தொழில்நுட்பம் மற்றும் பிராடெக்ட் டெஸ்டிங்-கிற்குப் பிரேம்வொர்க் ஆக விளங்கும். இதன் மூலம் National Digital Health Ecosystem அமைப்பில் தனியார் அமைப்புகளும் பங்குகொள்ள முடியும்.

யூபிஐ தளம் போல் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்

பேமெண்ட் தளத்திற்கு எப்படி யூபிஐ தளம் இருக்கிறதோ அதேபோல் தான் பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டமும் இயங்கும். மக்களுக்கும் சரி, மருத்துவச் சேவைகளை அளிக்கும் அமைப்புகளும் சரி ஓரே தளத்தில் இணைக்கும் திட்டம் தான். இத்திட்டம் மூலம் அனைவரும் மருத்துவச் சேவையை எளிதாக பெற முடியும்.