✍ சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தப் படைப்பாளியுமான வ.ரா. எனப்படும் வ.ராமசாமி ஐயங்கார் 1889ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த திங்களூரில் பிறந்தார்.

🌍 1789ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வில்லியம் ஹேர்ச்செல், மைமாஸ் என்ற துணைக்கோளை கண்டுபிடித்தார்.

🎆 1858ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி ஆழ்கடல் தொலைத்தந்தி சேவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.

👍 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

🏢 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.


நினைவு நாள் :-


திரு.வி.கல்யாணசுந்தரம்
🏁 கவிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகத் திறன் கொண்டவரும், தமிழ்த் தென்றல் என போற்றப்பட்டவருமான திரு.வி.கல்யாணசுந்தரம் 1883ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம் என்ற சிற்றூரில் பிறந்தார். 

🏁 இவர் சென்னை மகாஜன சங்கக் கூட்டத்தில் இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இவர் சென்னையில் காந்தியடிகள் ஆற்றிய உரையை அற்புதமாக மொழிபெயர்த்து காந்தியடிகளிடம் பாராட்டு பெற்றார். திலகர் தான் இவரது அரசியல் குரு.

🏁 சென்னையில் 1918-ல் முதன்முதலாக தொழிற்சங்கம் உருவானதில் இவரது பங்கு மகத்தானது. 1920-ல் நவசக்தி வார இதழைத் தொடங்கி 20 ஆண்டுகள் நடத்தினார். தன் எழுத்துகளால் தேசபக்தி கனலை மூட்டினார்.

🏁 இவர் புதிய உரைநடையின் தந்தை, மேடைப் பேச்சின் தந்தை என்றும் போற்றப்பட்டார். தமிழ்த் தென்றல், பேச்சுப் புயல், எழுத்து எரிமலை, செய்தித்தாள் சிற்பி என்றெல்லாம் புகழப்பட்டார். தமிழ்நாட்டு காந்தியாகவும், தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தந்தையாகவும், தொழிலாளர்களுக்கு தாயாகவும் விளங்கியவர் என்று இவரைப் பாராட்டியுள்ளார் கல்கி.

🏁 இவரே தன்னுடைய பெயரை திரு.வி.க. தமிழ் என்று அழைக்கும் வண்ணம் புதுவகை நடையைத் தோற்றுவித்தார். தமிழ்ப்பணி, நாட்டுப் பணியுடன் சமயப்பணியும் ஆற்றிய திரு.வி.க. 1953ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி 70-வது வயதில் (1953) மறைந்தார்.

பிறந்த நாள் :-


ஈ.வெ.இராமசாமி
🏁 பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்கள், 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.

🏁 இவர் காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியது மட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார்.

🏁 இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி யுனெஸ்கோ நிறுவனம் பெரியாருக்கு புத்துலக தொலைநோக்காளர், தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை என பாராட்டி விருது வழங்கியது.

🏁 அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி, பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் மற்றும் தந்தை பெரியார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

🏁 பகுத்தறிவின் சிற்பி, அறிவு பூட்டின் திறவுகோல், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார் 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி (94வது வயதில்) மறைந்தார்.

நரேந்திர மோடி

✦ இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி குஜராத் மாநிலம், மேஹ்சானா மாவட்டத்திலுள்ள வட்நகர் என்ற இடத்தில் பிறந்தார்.

✦ ஆர்.எஸ்.எஸ்-இன் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த இவர், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும் சேர்ந்து, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச்செயலாளராக உயர்ந்தார்.
✦ பிறகு 1998-ல் குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மோடி, விரைவில் இமாசலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற ஐந்து மாநிலங்களுக்கு, பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

✦ 1998ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்றபொழுது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 2001-ல் குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார். பிறகு 2014-ல் இந்திய பிரதமராக பதவியேற்றார்.